பயிற்சிக்கு இடையூறு செய்த ரசிகர்கள், அன்பால் கட்டிப்போட்ட கிங் கோலி – கூடவே கிடைத்த நல்ல மழை செய்தி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதல் சுற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து அக்டோபர் 22 முதல் துவங்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட முதன்மை 12 அணிகள் கோப்பைக்காக உண்மையான பலப்பரீட்சை நடத்த தயாராகியுள்ளன. அந்த வகையில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு முன்னதாகவே பயணித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலை பயிற்சிகளை மேற்கொண்டு 4 பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டனர்.

அதில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் தலா 1 வெற்றி தோல்வியை பதிவு செய்த இந்தியா ஐசிசி நடத்திய அதிகாரபூர்வ பயிற்சி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் கடைசி ஓவரில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதே பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவிருந்த நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் மெல்போர்ன் நகருக்கு பயணித்துள்ள இந்தியா அங்கு அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் பங்கேற்க அடுத்த கட்ட பயிற்சிகளை துவக்கியுள்ளது.

- Advertisement -

அன்பால் அரவணைப்பு:
முன்னதாக 1992 முதல் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முதல் முறையாக தோற்கடித்த பாகிஸ்தான் அதன் பின் அதே துபாயில் நடைபெற்ற சமீபத்திய ஆசிய கோப்பையிலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்து பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் கடந்த உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க காரணமாக இருந்த ஷாஹீன் அப்ரிடி இம்முறை காயத்திலிருந்து குணமடைந்து சவாலை கொடுக்க வருகிறார்.

எனவே அந்த வரலாற்று தோல்விக்கு பாகிஸ்தானையும் தலைகுனிவுக்கு காரணமாக அமைந்த ஷாஹீன் அப்ரிடியையும் இப்போட்டியில் திறம்பட எதிர்கொள்வதற்காக மெல்போர்ன் மைதானத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் வலை பயிற்சி களத்தில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தினேஷ் கார்த்திக் சுழல் பந்து வீச்சை எதிர்கொண்டார். அப்போது நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டார்.

- Advertisement -

அந்த சமயத்தில் அவரது தீவிரமான ரசிகர்கள் அவரது அருகே சென்று “கிங் கோலி, பந்தை மைதானத்திற்கு வெளியே சிக்ஸராக அடியுங்கள்” என்ற வகையில் போட்டி நடக்கும் போது கொடுக்கும் அதே ஆதரவை வலை பயிற்சி செய்யும் போதும் கொடுத்தனர். ஆனால் அந்த சத்தத்தால் கவனத்தை சிதற விட்ட விராட் கோலி அதிருப்தியடைந்து “பயிற்சி செய்யும் போது தயவு செய்து சத்தம் போடாதீர்கள், கவனம் சிதறுகிறது” என அன்போடு ரசிகர்களை கேட்டுக் கொண்டார். அதனால் அமைதியான ரசிகர்கள் “சரி வாருங்கள் பயிற்சி முடிந்தபின் நாம் நமது கிங்’க்கு ஆதரவு கொடுப்போம், அவர் எப்போதுமே கிங்” என்ற வகையில் பேசிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

பொதுவாக இதுபோன்ற வலை பயிற்சியின் போது ரசிகர்கள் தொந்தரவு செய்தால் சில வீரர்கள் பொறுமையிழந்து திட்டி அனுப்பிய வரலாறுகள் உள்ளது. அப்படிப்பட்ட வீரர்களுக்கு மத்தியில் பயிற்சி செய்யும்போது கூட தமக்கு ஆதரவு கொடுக்க வந்த ரசிகர்களை அவர் அன்பாலேயே அரவணைத்து கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. அதனாலேயே அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் இப்போட்டியில் 90% மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் அக்டோபர் 21ஆம் தேதியான இன்று மெல்போர்ன் நகரில் அறிவிக்கப்பட்டுள்ள வானிலை அறிக்கையின்படி 50 – 90% வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது அங்கே எந்த மழையும் இல்லாமல் இந்திய வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். அதே போல் அக்டோபர் 23ஆம் தேதியும் போட்டி நடைபெறும் போது மெல்போர்ன் மழை வரக்கூடாது என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாகவும் வேண்டுதலாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement