வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா டிசம்பர் 10 ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சட்டகிரோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சிகர் தவான் 3 ரன்னில் அவுட்டானாலும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் களமிறங்கிய இஷான் கிசான் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த வாய்ப்பை தங்கமாக மாற்றி அதிரடியாக ரன்களை குவித்தார்.
குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியுடன் சேர்ந்து எரிமலையைப் போல் வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் 2வது விக்கெட்டுக்கு 290 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 24 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களை பறக்க விட்டு 210 (131) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற 2 புதிய உலக சாதனைகளைப் படைத்து அவுட்டான அவரை தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 2, கேஎல் ராகுல் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி தனது பங்கிற்கு 11 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 113 (91) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ரெய்னா வரிசையில்:
இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும் அக்சர் பட்டேல் 20 ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் 409/8 ரன்களை குவித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து 410 என்ற பெரிய இலக்கை துரத்திய வங்கதேசம் இம்முறை ஆரம்ப முதலே கச்சிதமாக செயல்பட்ட இந்திய பவுலர்களிடம் பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 34 ஓவர்களில் 182 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை எடுத்தார்.
அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த இந்தியா இத்தொடரை இழந்தாலும் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து பிரம்மாண்ட ஆறுதல் வெற்றியுடன் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் இரட்டை சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற இசான் கிசான் முக்கிய நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் போன்ற ஆலோசனைகளை எதிர்ப்புறம் இருந்த ஜாம்பவான் விராட் கோலி தமக்கு முக்கிய நேரங்களில் கொடுத்ததாக போட்டியின் முடிவில் தெரிவித்தார்.
அத்துடன் ஆரம்ப முதலே அவர் அதிரடி காட்டியதை உணர்ந்த விராட் கோலி அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி இரட்டை சதமடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அதை விட இரட்டை சதமடிக்கும் போது இஷான் கிசானுக்கு முன்பாக அதை முதல் ஆளாக கையை உயர்த்தி விராட் கோலி தான் கொண்டாடினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்த போது முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இதே போல அவருக்கு முன்பாக அவரது சதத்தை உண்மையான அன்புடன் கொண்டாடியதை யாரும் மறக்க முடியாது.
இதையும் படிங்க: IND vs BAN : இதுவே கடைசியா இருக்கட்டும், இனியும் அவரை டீம்ல பார்க்க விரும்பல – சீனியர் வீரர் மீது ரசிகர்கள் அதிருப்தி
அந்த வரிசையில் இணைந்த விராட் கோலி இரட்டை சதத்தை கொண்டாடி முடித்து விட்டு இஷான் கிசான் தம்மிடம் வந்த போது பிரபல “பங்கரா” நடனத்தை லேசாக ஆடி அவரை கட்டிப் பிடித்து பாராட்டினார். அதை பார்த்த ரசிகர்கள் அதனால் தான் களத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உண்மையான அன்பு கொண்ட விராட் கோலி ஜாம்பவானாக திகழ்கிறார் என்று சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.



