பகையை மறந்து இந்தியர்களாக கை கொடுத்துக் கொண்ட தாதா கங்குலி – கிங் கோலி, விவரம் இதோ

Sourav Ganguly
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 55, மஹிபால் லோம்ரர் 54* என முக்கிய பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய டெல்லிக்கு பில் சால்ட் 87 (45) ரிலீ ரோசவ் 35* (22) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி 16.4 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

முன்னதாக இந்த சீசனின் ஆரம்பத்தில் பெங்களூருவில் இவ்விரு அணிகளும் மோதிய போது ஒரு முக்கிய சமயத்தில் பெவிலியினில் அமர்ந்திருந்த டெல்லி அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலியை அந்த வழியாக சென்ற விராட் கோலி முறைத்துப் பார்த்தார். அதை விட போட்டி முடிந்த பின் வழக்கம் போல இரு அணி வீரர்களும் ஜென்டில்மேன்களாக கை கொடுத்த போது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கருதப்படும் அவர்கள் இருவரும் கை கொடுத்துக் கொள்ளாமல் முகத்தையும் பார்க்காமல் விலகிச் சென்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்தியர்களாக சேர்ந்த கைகள்:
ஏனெனில் 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வெளிநாடுகளில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களால் 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோற்றதால் அவருடைய கேப்டன்ஷிப்பில் அதிருப்தியடைந்த தேர்வுக்குழு வெள்ளைப் பந்துக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற கருத்துடன் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

அதனால் மனமுடைந்த விராட் கோலி வெற்றிகரமாக இருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதிவியையும் ராஜினாமா செய்தார். அப்போது டி20 கேப்டன்ஷிப் பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டதாக கங்குலி தெரிவித்த நிலையில் தம்மிடம் அவ்வாறு யாரும் கேட்டுக் கொள்ளவில்லை என விராட் கோலி மறுப்பு தெரிவித்ததுடன் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவி பறிப்பதை 2 மணி நேரம் முன்பாக தான் தேர்வுக்குழு கூறியதாக உண்மையை உடைத்தார். அதற்கு நேரம் வரும் போது பிசிசிஐ பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்த அப்போதைய தலைவர் கங்குலி தான் விராட் கோலி கேப்டன்ஷிப் பறிபோவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக ரசிகர்கள் சில ஆதாரங்களுடன் விமர்சித்தனர்.

- Advertisement -

அத்துடன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து அவர் விலகிய போது அதை விராட் கோலி ரசிகர்கள் கொண்டாடினர். அப்போதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் என்று வந்த செய்திகளை சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் சிக்கிய சேட்டன் சர்மா உறுதிப்படுத்தினார். குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதை விட விராட் கோலியை பிடிக்காதவராக கங்குலி இருந்ததாக அவர் உண்மையை உளறினார். அந்த நிலைமையில் தான் பெங்களூருவில் நடைபெற்ற இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருவரும் முறைத்துக் கொண்டு கை கொடுக்காமல் சென்றனர்.

அதை விட லக்னோவில் கடந்த வாரம் கௌதம் கம்பீருடன் சண்டை போட்ட விராட் கோலி இந்த போட்டியில் அதே வெறியுடன் கங்குலியுடன் மோதுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பகையை மறந்த கௌரவ் கங்குலியும் விராட் கோலியும் போட்டியின் முடிவில் நேருக்கு நேராக பார்த்து கை கொடுத்து ஜென்டில்மேனாக நடந்து கொண்டனர். குறிப்பாக இந்தியாவுக்காக தம்மைப் போலவே கேப்டனாக விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றிய விராட் கோலியின் தோளில் தட்டி கங்குலி கை கொடுத்தார்.

இதையும் படிங்க:வீடியோ : ஜாம்பவானாக வளர்ந்தாலும் பழைச மறக்காமல் பயிற்சியாளர் காலில் விழுந்து – ஆசிர்வாதம் வாங்கிய கிங் கோலி

அதற்கு விராட் கோலியும் கை கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் என்ன தான் சண்டை இருந்தாலும் பகையை மறந்து இந்தியர்களாக அந்த 2 ஜாம்பவான்களும் நடந்து கொண்டதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இதனால் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே இருந்து வந்த சர்ச்சைகளும் சலசலப்புகளும் தற்போது சற்று ஓய்ந்துள்ளது.

Advertisement