வீடியோ : அடம் பிடித்த தனது மகளுடன் வேறு வழியின்றி பேட்டி கொடுத்த கவாஜா – குழந்தையின் சேட்டையால் சிரித்த செய்தியாளர்கள்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஜூலை 16ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாளிலேயே 393/8 ரன்கள் குவித்து தைரியமாக டிக்ளர் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 118* ரன்களும் ஜாக் கிராவ்லி 61 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேத்தன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 9, மார்னஸ் லபுஸ்ஷேன் 0 என 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்டுவர்ட் பிராட் வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்தும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் டிராவிஸ் ஹெட் 50, கேமரூன் கிரீன் 38 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தினர்.

- Advertisement -

செல்ல மகளின் சேட்டை:
அதில் நேரம் செல்ல செல்ல அசத்தலாக பேட்டிங் செய்த கவாஜா தன்னுடைய 15வது டெஸ்ட் சதத்தை அடித்து இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக 3 இலக்க ரன்களை தொட்டு பேட்டை காற்றில் வீசி எறிந்து வெறித்தனமாக கொண்டாடினார். அந்த வகையில் 2வது நாள் முடிவில் 126* ரன்களுடன் பேட்டிங் செய்யும் அவருடன் அலெக்ஸ் கேரி தனது பங்கிற்கு 52* ரன்கள் எடுத்து அசத்துவதால் 316 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா இன்னும் 82 ரன்கள் மட்டுமே பின் தங்கி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து வருகிறது. முன்னதாக சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்திய மண்ணில் இரட்டை சதமடித்து அசத்திய அவர் இந்த போட்டிக்கு பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னுடைய மகளுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

குறிப்பாக போட்டி முடிந்த சமயத்திலிருந்தே தன்னுடைய மகள் தம்மை விட்டு சிறிது நேரம் கூட பிரிய மனமில்லாமல் அழுவதால் வேறு வழியின்றி அழைத்து வந்ததாக உஸ்மான் கவஜா தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட செய்தியாளர்கள் பேட்டியை துவங்கினர். ஆனால் ஆரம்பத்திலேயே பேட்டியை கொடுக்க விடாமல் தன்னுடைய 1 வயது தங்கச்சி எங்கே என்று கேட்டு அடம் பிடித்த அந்த குழந்தையை ஒரு வழியாக சமாதானம் செய்த கவாஜா கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார்.

- Advertisement -

அப்போது எதிரே வைக்கப்பட்டிருந்த செய்தியாளர்களின் கேமராவை எடுத்து விளையாடத் தொடங்கிய தனது மகளை “கொஞ்ச நேரம் அமைதியா இரு. பின்னர் வேண்டுமானால் என்னுடைய ஃபோனில் விளையாடு” என்று கொஞ்சி கவாஜா சமாதானம் செய்தது அருகில் இருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இது பற்றி நிகழ்ந்த உரையாடல் பின்வருமாறு. “கேமராவை ஸ்வைப் செய்ததை நிறுத்து. பின்னர் வேண்டுமானால் தந்தையின் ஃபோனில் நீ விளையாடுவாய்” என்று கவாஜா சொன்னதும் செய்தியாளர்கள் சிரித்ததால் குழந்தை அழும் வகையில் கண்களை துடைத்தது.

மேலும் பேபி ஆல்யா இங்கு இல்லையா அப்பா? என்று குழந்தை கேட்டதற்கு “ஆம் பேபி ஆல்யா இங்கே இல்லை. அவர் நம்முடைய அம்மாவிடம் இருக்கிறார். 2 நிமிடத்தில் நாம் அங்கே செல்வோம் சரியா” என பதிலளித்த கவாஜா தனது மகளை கொஞ்சி முத்தமிட்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது கிடைத்த வாய்ப்பில் சதமடித்துள்ளது தம்மை மிகவும் உணர்ச்சிபூர்வமாக மாற்றியதாக உஸ்மான் கவஜா தெரிவித்தார்.

இதையும் படிங்க:32 வயசானாலும் இன்னும் 10 வருஷம் அவரால சூப்பரா ஆடமுடியும். அவர் ஒரு பிரிலியன்ட் பிளேயர் – பேர்ஸ்டோ புகழாரம்

குறிப்பாக சமீபத்தில் இந்திய மண்ணில் சதமடித்தது போலவே இப்போட்டிலும் அசத்தியுள்ள தாம் யாருக்காகவும் தம்மைப் பற்றி நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த அவர் ஆஸ்திரேலியாவுக்காக கடந்த 10 வருடங்களாக வெளிப்படுத்திய செயல்பாடுகள் அதிர்ஷ்டத்தால் மட்டும் கைகூடவில்லை என்பதை காட்ட விரும்புவதாக கூறினார்.

Advertisement