நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தினாலும் அடுத்ததாக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் ஆரம்பத்திலேயே பின்தங்கிய இந்தியா நவம்பர் 27ஆம் தேதியன்று களமிறங்கிய 2வது கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது. முன்னதாக ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அர்ஷிதீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய 2 இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர். அதில் ஷார்துல் தாகூர், அர்ஷிதீப் ஆகியோரை விட முழுமையான 10 ஓவர்களை வீசிய உம்ரான் மாலிக் 66 ரன்களை கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அறிமுகப் போட்டியில் அசத்தலாகவே செயல்பட்டார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர் 2020, 2021 ஆகிய ஐபிஎல் சீசன்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 150 கி.மீ என்ற அதிரடியான வேகத்தில் பந்து வீசி சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற நிறைய ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்றார். அந்த நிலைமையில் கடந்த ஜூலை மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற உதவிய அவர் அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரின் ஒரு போட்டியில் விளையாடினார்.
வெறித்தனம் வெறித்தனம்:
இருப்பினும் லைன், லென்த் போன்ற அம்சங்களை பின்பற்றாமல் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசிய அவர் அதிகமாக ரன்களை கொடுத்த காரணத்தால் 2 போட்டியுடன் அவ்வளவு தான் என்று கழற்றி விடப்பட்டார். ஆனால் ஆரம்பத்தில் அனைவருமே தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் 2 போட்டியுடன் அவரை குறைத்து மதிப்பிட்டு இந்தியா தவறு செய்து விட்டதாக வாசிம் அக்ரம், பிரட் லீ போன்ற ஜாம்பவான்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அந்த நிலையில் சமீபத்திய உள்ளூர் தொடர்களில் அசத்தலாக செயல்பட்டதால் மீண்டும் தேர்வாகியுள்ள அவர் அறிமுகப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக ஜாகிர் கான், அஜித் அகர்கர் போன்ற முன்னாள் இந்திய ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அதை விட தேசத்துக்காக சர்வதேச அரங்கில் விளையாட வேண்டும் என்ற தன்னுடைய மகனின் கனவு நிறைவேறியதால் உம்ரான் மாலிக் விளையாடிய அறிமுகப் போட்டியை ஒரு பந்து கூட விடாமல் பார்த்த அவரது குடும்பத்தினர் டேவோன் கான்வேயை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை பதிவு செய்த போது மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். அவரது அன்னையும் தந்தையும் முதல் விக்கெட்டை எடுத்த போது கைதட்டி கட்டி பிடித்துக் கொண்டாடிய நிலையில் அவருடைய தம்பி இளைஞனுக்கு அடையாளமாக வெறித்தனமாக ஆரவாரம் செய்து துள்ளி குதித்துக் கொண்டாடினார்.
இதை பிரபல செய்தியாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை பார்க்கும் ரசிகர்கள் நாட்டுக்காக சிறப்பாக விளையாடி விக்கெட்டை எடுத்த போது உண்மையான பாசம் கொண்ட அன்னை, தந்தை, தங்கை, தம்பி ஆகியோர் அதற்கு அடையாளமாக கொண்டாடியதை பார்த்து நெகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த வகையில் நல்ல வளர்ச்சியை கண்டு வரும் உம்ரான் மாலிக் வருங்காலங்களில் நிச்சயம் நல்ல லைன், லென்த் போன்றவற்றை கற்றுக்கொண்டு பெரிய அளவில் வருவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Reaction of Umran Malik’s family on his debut ODI wicket is priceless! ♥️ pic.twitter.com/95qDFpqTCI
— Mohsin Kamal (@64MohsinKamal) November 26, 2022
அத்துடன் கற்றுக் கொடுத்தாலும் கிடைக்காத அதிரடியான வேகம் என்னும் தனித்துவமான திறமையை பிறப்பிலேயே கொண்டிருப்பதால் லைன், லென்த் போன்ற விவேகமும் சேரும் போது உண்மையாகவே உம்ரான் மாலிக் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளராக வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றே கூறலாம்.
இதையும் படிங்க : IND vs NZ : அம்பயரின் முடிவுக்கு பின்னர் கட்டியணைத்த கேப்டன்கள் – இருந்த நல்ல வாய்ப்பும் போச்சா?
ஏனெனில் இந்தியாவில் தற்சமயத்தில் அவருக்கு நிகராக வேகமாக பந்து வீசுவதற்கு யாருமே இல்லை. எனவே அதற்கு தொடர்ச்சியான உழைப்பதுடன் இந்தியாவுக்காக விளையாட கிடைக்கும் ஓரிரு வாய்ப்புகளிலும் அசத்தலாக செயல்பட்டு நிரந்தரமான இடத்தை பிடிப்பது அவரது கையில் தான் உள்ளது என்றே கூறலாம்.



