ஐபிஎல் 2022 தொடரில் மே 6-ஆம் தேதி நடைபெற்ற 51-வது லீக் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் வலுவான குஜராத்தை கடைசி இடத்தில் திண்டாடும் மும்பை எதிர்கொண்டது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 177/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 43 (28) மற்றும் இஷான் கிசான் 45 (29) என அதிரடியாக 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

இருப்பினும் நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ் 13 (11) திலக் வர்மா 21 (16) கைரன் பொல்லார்ட் 4 (14) என சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். நல்லவேளையாக இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 44* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்து காப்பாற்றினார்.
கோட்டைவிட்ட குஜராத்:
அதை தொடர்ந்து 178 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்கள் ரித்திமான் சஹா 6 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (40) ரன்களும் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (36) ரன்களும் எடுத்து 106 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் அந்த அணியின் வெற்றி உறுதி என அனைவரும் நம்பினர். இருப்பினும் 12-வது ஓவரில் அவர்கள் அவுட்டாக அடுத்து வந்த சாய் சுதர்சன் 14 (11) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றிய நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரிகளுடன் 24 (14) ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஸ்டவசமாக ரன் அவுட்டானார்.

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது அதை அற்புதமாக வீசிய டானியல் சாம்ஸ் 1, 0 என முதல் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுக்க 3-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்ற ராகுல் திவாடியா ரன் அவுட்டானார். எஞ்சிய பந்துகளிலும் 1, 0, 0 என அற்புதமாக வீசிய டேனியல்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். மறுபுறம் மில்லர் 19* (14) ரசித் கான் 1* (1) போன்ற கடந்த போட்டியில் இதே போன்ற சூழ்நிலையில் மிரட்டலாக செயல்பட்டு பினிஷிங் செய்த வீரர்கள் களத்தில் இருந்த போதிலும் குஜராத் பரிதாபமாக தோற்றது.
சுதர்சன் விக்கெட்:
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் பட் கமின்ஸ்க்கு எதிராக 35 ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விட்ட டேனியல் சாம்ஸ் இந்த முறை யாருமே எதிர்பாராத வகையில் அற்புதமாக செயல்பட்டு 5 ரன் வித்தியாசத்தில் மும்பைக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதேபோல் இதற்கு முந்தைய போட்டிகளில் இதுபோன்ற சூழ்நிலையில் அபாரமாக செயல்பட்ட குஜராத் இந்த போட்டியில் கடைசி ஓவரில் வெற்றியை கோட்டை விட்டு பங்கேற்ற 11 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்தாலும் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. மறுபுறம் 8 தோல்விகளால் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை 10 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்து ஆறுதல் அடைந்ததுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் கில் மற்றும் சஹா ஆகியோர் 106 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து தங்களது வேலையை கச்சிதமாக செய்து விட்டு 12-வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அப்போது களமிறங்கிய தமிழக இளம் வீரர் சாய் சுதர்ஷன் அதிரடியாக 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 (11) ரன்கள் எடுத்திருந்தபோது பகுதி நேர பந்து வீச்சாளரான கைரன் பொல்லார்ட் வீசிய 16-வது ஓவரின் கடைசி பந்தில் ஃபுல் சாட் அடிக்க முயன்றபோது தனது கட்டுப்பாட்டை இழந்து தனது பேட்டை ஸ்டம்ப்பில் விட்டதால் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
மானம் போகுது:
பொதுவாக இதுபோல ஹிட் விக்கெட் என்பதெல்லாம் கிரிக்கெட்டில் அரிதினும் அரிதாக மட்டுமே நிகழக்கூடியதாகும். அதிலும் பந்தை எதிர்கொள்ளும்போது ஒரு பேட்ஸ்மேன் தனது பேலன்சை இழந்தால் மட்டுமே தடுமாறி ஸ்டம்ப் மீது மோதி வித்தியாசமான முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதுபோன்ற வகையில் சுதர்சன் அவுட்டானது தமிழக ரசிகர்களின் மானம் போகும் வகையில் அமைந்தது. அவர் இவ்வாறு அவுட்டாகாமல் மேலும் 5 – 10 கணிசமான ரன்களை எடுத்திருந்தால் கூட குஜராத் வெற்றி பெற்றிருக்கும்.
இருப்பினும் இதற்கு முன் ஹர்டிக் பாண்டியா போன்ற நிறைய வீரர்கள் இதுபோல் அவுட்டாகியுள்ளார்கள் என்பதாலும் சுதர்சன் இளம் வீரர் என்பதாலும் விரைவில் இந்த விஷயத்தில் அவர் முன்னேற்றம் அடைந்து சிறப்பாக செயல்படுவார் என நம்பலாம். ஐபிஎல் போட்டிகளில் கடைசியாக ஹிட் விக்கெட்டான 5 வீரர்களின் பட்டியல் இதோ:
1. ரியன் பராக் (2019)
2. ரசித் கான் (2020)
3. ஜானி பேர்ஸ்டோ (2020)
4. ஹர்டிக் பாண்டியா (2021)
5. சாய் சுதர்சன் (2022)*



