வீடியோ : அச்சு அசல் தந்தையை போலவே அசத்தும் இளம் சந்தர்பால் – அறிமுக போட்டியிலேயே நாயகனாக சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நிகழ்ந்த நிறைய எதிர்பாராத திருப்பங்களுக்கு மத்தியில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே ஸ்காட்லாந்து போன்ற கத்துக் குட்டிகளிடம் அடி வாங்கி முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. 70, 80களில் ஜாம்பவான் வீரர்களால் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸை பார்த்து எதிரணி ரசிகர்கள் கூட பரிதாபப்படும் நிலையில் அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்த அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று கான்பெரா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பிரதமர் அணி முதலில் பேட்டிங் செய்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 322 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மாட் ரென்ஷா 81 ரன்களும் மார்கஸ் ஹாரீஸ் 73 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தன்னுடைய முதல் இன்னிங்ஸில் கடுமையாக போராடி 235 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அவதரித்த நாயகன்:
குறிப்பாக முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தேர்வாகியுள்ள முன்னாள் ஜாம்பவான் வீரர் சிவ்நரேன் சந்தர்பால் அவர்களின் மகன் தக்நரேன் சந்தர்பால் கேப்டன் க்ரைக் ப்ரத்வெய்ட் உடன் தொடக்க வீரராக களமிறங்கி 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தலான தொடக்கம் கொடுத்தார். அதில் ப்ரத்வெய்ட் 47 ரன்களில் அவுட்டானதும் அடுத்து வந்த போனர் 0, டேவோன் தாமஸ் 8, கெய்ல் மேயர்ஸ் 6 என முக்கிய வீரர்கள் வழக்கம் போல சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் அவுட்டாகி வேலையை காட்டினார்கள். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற சந்தர்பால் தனது தந்தையை போலவே தனி ஒருவனாக எதிரணி பவுலர்களை பொறுமையாகவும் நிதானமாகவும் எதிர்கொண்டு 13 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 119 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றி அவுட்டானார்.

சொல்லப்போனால் இதர பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 200 பந்துகளை கூட எதிர்கொள்ளாமல் 120 ரன்கள் எடுத்த நிலையில் அவர் மட்டும் 293 பந்துகளை எதிர்கொண்டு 40.61 என்ற டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரித்தான ஸ்ட்ரைக் ரேட்டில் 119 ரன்கள் குவித்து அசத்தினார். அவரால் ஓரளவு தப்பித்த வெஸ்ட் இண்டீஸ் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தங்களுடைய 2வது இன்னிங்ஸில் 221/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக மாட் ரென்ஷா சதமடித்து 101* ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதனால் 309 என்ற மெகா இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மீண்டும் தொடக்க வீரராக அசத்திய சந்தர்பால் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (138) ரன்களை நங்கூரமாக நின்று குவித்து அவுட்டானார். அவருடன் டேவோன் தாமஸ் 55, ஜோஸ்வா 52* என இதர வீரர்கள் இம்முறை நல்ல ரன்களை எடுத்ததால் தப்பித்த வெஸ்ட் இண்டீஸ் 277/8 ரன்கள் எடுத்த போது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் இப்போட்டி டிராவில் முடிவடைந்தது. தோற்க வேண்டிய இப்போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தப்பிப்பதற்கு முதல் இன்னிங்ஸில் நங்கூரமாக நின்று சதமடித்த சந்திர்பால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அதிலும் இப்போட்டியில் அவரது தந்தை போலவே களத்திற்குள் வந்ததும் ஸ்டம்ப்களில் இருக்கும் பெய்ல்ஸை எடுத்து தனது பேட்டிங் கார்டை சந்தர்பால் உருவாக்கினார். மேலும் தனது தந்தையை போலவே வித்தியாசமாக நின்று ஆன் சைட் ட்ரைவ் அடித்தது, ஸ்பின்னர்களை இறங்கி வந்து அடித்தது, ஸ்வீப் அடித்தது என அச்சு அசல் சிவ்நரேன் சந்தர்பால் போலவே அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும் அனைவரும் வியந்து போனார்கள். இதை பார்க்கும் போது புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது நமக்கே தோன்றுகிறது.

அத்துடன் இதுவரை உள்ளூர் அணிகளுக்காக விளையாடிய அவர் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயக்கன் விருது வென்றுள்ளார். இதனால் துவண்டு கிடக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய நாயகன் போல் அவதரித்துள்ள இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக துவங்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே அறிமுகமாக களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

Advertisement