வீடியோ : யார்க்கர் பந்தால் போட்டியை மாற்றிய நடராஜன் – உள்ளூரில் மட்டுமே அடிப்பார் என டெல்லி இளம் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் டெல்லியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அபிஷேக் ஷர்மா 67 (36) ரன்களும் ஹென்றிச் க்ளாஸென் 53* (27) ரன்களும் எடுத்த அதிரடியில் 20 ஓவர்களில் 197/6 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 198 ரன்களை துரத்திய டெல்லிக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் உடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 112 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த பில் சால்ட் 59 (35) ரன்கள் விளாசி வெற்றி பாதைக்கு அழைத்து வந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே பொறுப்பின்றி 1 (3) ரன்னில் அவுட்டாகி சென்ற நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மிட்சேல் மார்ஷ் 1 பவுண்டரி 6 சிக்ஸருடன் 63 (39) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது வந்த இளம் வீரர் பிரியம் கார்க்கை 12 (9) ரன்களில் மயங் மார்க்கண்டே கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

சரிப்பட்டு வரமாட்டார்:
அடுத்த ஓவரிலேயே மறுபுறம் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட இளம் வீரர் சர்பராஸ் கான் 9 (10) ரன்கள் எடுத்திருந்த போது தமிழக வீரர் நடராஜன் அற்புதமான யார்க்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கி மற்றுமொரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் கடைசி நேரத்தில் அக்சர் படேல் 29* (14) ரன்களும் ரிபல் படேல் 11* (9) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 188/6 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி பரிதாபமாக தோற்றது. அப்படி முக்கிய நேரத்தில் யார்க்கர் பந்தால் போட்டியை ஹைதராபாத் பக்கம் திருப்பிய நடராஜன் தமிழக ரசிகர்களை பெருமைப்படுத்தும் வகையில் அசத்திய நிலையில் போராடி வென்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே 2 விக்கெட்களை எடுத்தார்.

அதை விட ஏற்கனவே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறும் டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய நிலையில் முக்கிய நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் சர்பராஸ் கான் மீண்டும் சொதப்பலாக செயல்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. ஏனெனில் உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பையில் கடந்த சில வருடங்களாகவே ரன் மெஷினாக சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து வெறித்தனமாக இந்தியாவுக்காக விளையாட போராடி வரும் அவர் தேர்வுக்குழு கதவை தொடர்ந்து தட்டி வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் பெரும்பாலும் ரசிகர்கள் இல்லாத காலியான மைதானத்தில் அழுத்தமற்ற உள்ளூர் போட்டிகளில் அசத்திய அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான அழுத்தத்தை கொண்ட ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் களமிறங்கிய 4 போட்டிகளில் வெறும் 53 ரன்களை 85.48 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களுக்கே இப்போதெல்லாம் இந்திய அணியில் முன்னுரிமை கொடுக்கப்படும் நிலையில் உள்ளூர் தொடரில் அசத்தும் அவர் இங்கே இப்படி சுமாராக செயல்பட்டு வருகிறார்.

இதனால் உங்களுக்கு எப்படி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதற்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு என்ன சம்பந்தம் என்று சிலர் கேட்கலாம். ஆனால் உண்மையாகவே கிளாஸ் நிறைந்த பேட்ஸ்மேன்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து இடங்களிலும் அசத்துவார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க:IPL 2023 : மகத்தான நீங்க இப்டி செய்யலாமா? முக்கிய முடிவில் சொதப்பிய கங்குலி, பாண்டிங் – பதவி விலகுமாறு விளாசும் ரசிகர்கள்

அத்துடன் இந்த சீசன் மட்டுமல்லாமல் 2015 முதல் இதுவரை 37 இன்னிங்ஸில் 585 ரன்களை 130.58 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வரும் அவர் ஐபிஎல் தொடரில் எப்போதும் சிறப்பாக செயல்பட்டதில்லை. அதனால் ஏமாற்றமடையும் ரசிகர்கள் இவர் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே அடிப்பார் அழுத்தமான ஐபிஎல் தொடரில் அடிக்க மாட்டார் என்று சமூக வலைதளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement