எத்தனை ரசிகர்கள் இருந்தாலும் அம்மாவுக்கு ஈடாகுமா – சூர்யகுமாரின் சதத்தை கொண்டாடிய அவரது தாய்

Suryakumar Yadav Mom
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூஸிலாந்துக்கு பயணித்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. உலகக்கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இளம் அணி விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவின் 111* (51) ரன்கள் அதிரடியான சதத்தால் 20 ஓவர்களில் 191/6 ரன்கள் குவித்தது. அதை துரத்திய நியூசிலாந்துக்கு கேப்டன் வில்லியம்சன் 61 (52) ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் சொதப்பலாக செயல்பட்டதால் 18.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. அந்த வெற்றிக்கு சந்தேகமின்றி இதர இந்திய பேட்ஸ்மேன்ட்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 69 (69) ரன்கள் குவித்த நிலையில் தனி ஒருவனாக 111* (51) ரன்கள் விளாசிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அம்மாவ போல வருமா:
இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் கடுமையாக போராடி 20+ வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமான அவர் கடந்த ஒன்றரை வருடங்களில் களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் இதே போல் அதிரடி சரவெடியாக விளையாடி நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து டி20 கிரிக்கெட்டில் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அதை லாவகமாக மைதானத்திலன் நாலாபுறங்களிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக தெறிக்க விடும் அவரை ரசிகர்கள் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடுகிறார்கள்.

மேலும் விராட் கோலி முதல் எதிரணி கேப்டன் கேன் வில்லியம்சன் வரை அவரது அட்டகாசமான பேட்டிங்கை பார்த்து வியந்து பாராட்டி அவருக்கு ரசிகர்களாக மாறாதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். இருப்பினும் உலகில் எத்தனை ரசிகர்கள் இருந்தாலும் சூரியகுமாருக்கு அவருடைய அம்மா தான் முதல் ரசிகர் என்றால் மிகையாகாது. பொதுவாகவே உலகில் பிறந்த அத்தனை பேருக்கும் எவ்வளவு வயதானாலும் அவர்களுடைய தாய் தான் முதல் ரசிகராகவும் நலம் விரும்பியாகவும் இருப்பார்கள். அந்த வகையில் தாய் நாட்டுக்காக கடல் கடந்து சென்று தனது மகன் விளையாடியதை வீட்டிலிருந்து தொலைக்காட்சியின் வாயிலாக பார்த்த சூரியகுமாரின் அம்மா அவர் சதமடித்ததும் அருகே வந்து தனது மகனின் முகத்தை தடவி கொடுத்தார்.

- Advertisement -

அத்துடன் தனது செல்ல மகனின் முகத்தை தடவி முத்தமிட்ட அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்படி தனது மகனை தன்னுடைய மனைவி கொஞ்சுவதை பார்த்து சூரியகுமாரின் தந்தை மகிழ்ச்சியடைந்து புன்னகைத்தார். அப்படி பாச மழை பொழிந்த இந்த தருணத்தை சூரியகுமாரின் தங்கை தினல் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் உலகில் நம்மை போல் எத்தனை ரசிகர்கள் இருந்தாலும் சூரியகுமாருக்கு அவருடைய அம்மா தான் மிகச் சிறந்த ரசிகர் என்று பாராட்டுகிறார்கள்.

அப்படி தாய், தந்தை மனதை குளிர்வித்து வரும் சூரியகுமார் யாதவ் இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார். மேலும் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பையிலும் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்து வெற்றிக்காக போராடிய அவர் அடுத்ததாக நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியிலும் அதிரடியாக செயல்பட்டு இத்தொடரின் கோப்பையை இந்தியா வெல்ல போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement