வீடியோ : நல்லார்க்கிங்களா வேலைலாம் எப்படி போகுது – ரிவர்ஸ் ஷாட் போட்டு மைதான பராமரிப்பாளருடன் ரெய்ட் போன சூரியகுமார்

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கிய இளம் அணி முதல் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் பந்து வீச்சில் சொதப்பியதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியது. அந்த நிலைமையில் நவம்பர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஹமில்டன் நகரில் இருக்கும் செடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 5 ஓவர்களில் விளையாடிக் கொண்டிருந்த போது மழை வந்து சென்றதால் தலா 29 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. அந்த நிலைமையில் தொடர்ந்து விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் தவான் 3 (10) ரன்களில் நடையை கட்டிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45* (42) ரன்களும் நம்பிக்கை நாயகன் சூரியகுமார் யாதவ் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 34* (25) ரன்களும் எடுத்து வேகமான ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

- Advertisement -

எப்படி இருக்கீங்க:
அதனால் 12.5 ஓவரில் 89/1 என்ற நிலைமையில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்த போது மீண்டும் வந்த மழை விலகி செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்து தொடர்ந்து கொட்டித் தீர்த்ததால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் 1 – 0* என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கும் இத்தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட இந்தியா நவம்பர் 30ஆம் தேதியன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த டி20 தொடரில் இதே போல் மழைக்கு மத்தியில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு 2வது போட்டியில் சதமடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் யாதவ் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அந்த நிலையில் இப்போட்டியில் மீண்டும் அதிரடி காட்டிய அவர் மைக்கேல் ப்ரெஸ்வேல் வீசிய 12வது ஓவரின் 4வது பந்தை இடது கை பேட்ஸ்மேனாக மாறி ஸ்வீப் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே எப்படி பந்து வீசினாலும் இதே போல் மைதானத்தின் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கும் அவர் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரை எடுத்துள்ளார்.

- Advertisement -

அதை நிரூபிக்கும் வகையில் இப்போட்டியில் அற்புதமான ஷாட் அடுத்து தனது திறமையை வெளிப்படுத்திய அவர் போட்டி மழையால் ரத்தான ஏமாற்றத்தில் பாதியிலேயே வெளியேறினார். மேலும் மழை நிற்குமா என்று நீண்ட நேரமாக ஏமாற்றத்துடன் காத்திருந்த அவர் ஒரு கட்டத்தில் நேராக களத்திற்குள் சென்று தண்ணீரை அகற்றும் சூப்பர் சோப்பர் ட்ரக்கை ஓட்டிய மைதான பராமரிப்பாளரிடம் லிப்ட் கேட்டு ஏறினார். அந்த ட்ரக்கை இயக்கிய மைதான பராமரிப்பு ஓட்டுநர் அருகே அமர்ந்து கொண்ட சூரியகுமார் “எப்படி இருக்கீங்க வேலை முடிய எவ்வளவு நேரமாகும்” என்பது போல் ஜாலியாக பேசினார்.

அப்படி சூரியகுமார் மட்டுமல்லாமல் இருநாட்டு ரசிகர்களையும் இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே சோதித்து வரும் மழை இது வரை நடைபெற்ற 5 போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு தனது வேலையை காட்டி ஏமாற்றத்தை கொடுத்தது வருகிறது. இருப்பினும் கடைசி போட்டியிலாவது குறுக்கே வராமல் முழுமையாக நடத்த மழை வழி விட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement