இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கி 2024 டி20 உலக கோப்பையை வெல்லும் பயணத்தையும் வெற்றியுடன் துவக்கியுள்ளது. முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றிகளை பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்க ராஜ்கோட் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் அட்டகாசமாக பேட்டிங் செய்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 112* (51) ரன்களை விளாசி 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.
அப்போட்டியில் அவருடைய பேட்டிங்கை பார்த்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் “என்னப்பா இவர் எப்படி போட்டாலும் அடிக்கிறார், உண்மையாகவே இவர் வேற லெவல், வேற்று கிரகத்திலிருந்து வந்தவர், மனிதரே கிடையாது ரன் மெஷின்” என வியந்து வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் பாராட்டி வருகிறார்கள். ஏனெனில் பொதுவாகவே களமிறங்கிய முதல் பந்தியிலிருந்தே எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கி விரைவாக ரன்களை சேர்க்கும் அவர் இப்போட்டியில் முகத்துக்கு நேராக வந்த ஒரு ஃபுல் டாஸ் பந்தை அப்படியே முட்டி போட்டு கீழே விழுந்து விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் சிக்சராக பறக்க விட்டார்.
பாராட்டிய கிங் கோலி:
அதே போலவே மேலும் சில சிக்சர்களை விக்கெட் கீப்பர் நிற்கும் பின் திசையில் விழுந்து விழுந்து பறக்க விட்ட அவர் பல குட்டிகரணங்கள் அடித்தும் காயத்தை சந்திக்காத அளவுக்கு தனது உடல் தகுதியை பிட்டாக வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்தார்கள். அந்த வகையில் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்த சூரியகுமார் யாதவ் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடுவதற்கேற்ப அற்புதமாக பேட்டிங் செய்து மாயாஜாலம் நிகழ்த்தினார்.
அதனால் பாராட்டு மழையில் நனைந்து வரும் அவர் போட்டி முடிந்த பின் சூர்யா சூர்யா என்ற ரசிகர்களின் முழக்கத்திற்கு மத்தியில் உடைமாற்றும் அறைக்குச் சென்று தன்னுடைய மொபைல் போனை எடுத்து தன்னை சமூக வலைதளங்களில் வாழ்த்தியவர்களை பற்றி பார்த்தார். அப்போது அருகில் இருந்த சஹால் தான் என்னுடைய பேட்டிங் பயிற்சியாளர் என்று சொல்லி கலகலப்பை வெளிப்படுத்திய அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் நபராக விராட் கோலி வாழ்த்தியதை பார்த்து மிகவும் பூரித்துப் போனார்.
அதைப் பார்த்து நாக்கை வெளியே கடித்தவாறு குழந்தை போல் ரியாக்சன் கொடுத்த அவர் “ஓ. யார் என்னை வாழ்த்தியுள்ளார் என்று பாருங்கள்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன் “பிரதர், உங்களுக்கு என்னுடைய நிறைய அன்புகள். உங்களை விரைவில் சந்திக்கிறேன்” என்று தன்னை வியந்து பாராட்டிய விராட் கோலிக்கு பதிலளித்த சூரியகுமார் தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்களின் வாழ்த்து மழைக்கு மத்தியில் இந்த வெற்றிக்காக அணி நிர்வாகம் தயாராக வைத்திருந்த கேக்கை கட் செய்து ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடினார்.
தொடர்ந்து ரசிகர்களின் வாழ்த்து மழையில் அங்கிருந்து பேருந்தில் ஏறி ஹோட்டல் அறைக்கு திரும்பிய சூரியகுமார் இவ்வளவு அன்பை வெளிப்படுத்தி வாழ்த்திய அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்தார். முன்னதாக கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50+ பேட்டிங் சராசரியையும் 71 சதங்களையும் 24000+ ரன்களையும் விளாசி ஜாம்பவானாக தன்னை நிரூபித்துள்ள விராட் கோலி சூரியகுமாரின் திறமையை பலமுறை பாராட்டியுள்ளார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்த போது அவருடைய திறமையை பார்த்து களத்திலேயே நேரடியாக பாராட்டிய விராட் கோலி மற்றொரு தருணத்தில் நீங்கள் வீடியோ கேமில் விளையாடுவதைப் போல் பேட்டிங் செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியிருந்தார்.
இதையும் படிங்க: IND vs SL : அடுத்த ராகுலாக உருவாவதற்கு முன் கழற்றி விடுங்க, இளம் வீரரை சாடும் ரசிகர்கள் – 3 காரணம் இதோ
அப்படி அண்ணன் தம்பியை போல் தற்போது இந்திய அணியில் விளையாடும் விராட் கோலி – சூரியகுமார் ஆகியோர் அடுத்ததாக ஜனவரி 10ஆம் தேதி துவங்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இணைந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



