மீண்டும் பெய்ல்ஸை மாற்றி மேஜிக் விக்கெட்டை எடுத்த ப்ராட் – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனையுடன் ஓய்வு

Stuart Broad 5
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடரை போராடி 2 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்துள்ளது. அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்த ஆஸ்திரேலியாவுக்கு 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்த இங்கிலாந்தின் வெற்றியை 4வது போட்டியில் மழை தடுத்தது. அதனால் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்ட நிலையில் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கடைசி போட்டியில் அசத்திய இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முன்னதாக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியின் 3வது நாளின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 37 வயதாகும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ராட் அறிவித்தது அந்நாட்டு ரசிகர்களை சோகமடைய வைத்தது. கடந்த 2006இல் அறிமுகமாகி 2007 டி20 உலக கோப்பையில் இந்தியாவின் யுவராஜ் சிங்கிடம் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் கொடுத்து மோசமான உலக சாதனை படைத்த அவர் கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டாலும் 2010 டி20 உலக கோப்பையின் வெற்றியில் முக்கிய பங்காற்றி 2014 வரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாகவே செயல்பட்டார்.

- Advertisement -

உலக சாதனையுடன் ஓய்வு:
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்ப முதலே சீராக மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் 165 போட்டிகளில் 604 விக்கெட்களை சாய்த்து அதிக விக்கெட்களை எடுத்த 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். மேலும் மொத்தமாக 847 விக்கெட்களை எடுத்துள்ள அவர் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி காணலாம் என்பதற்கு அடையாளமாக ஜாம்பவானாக ஓய்வு பெற்றதால் சச்சின் முதல் யுவ்ராஜ் வரை ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதை விட தம்முடைய கேரியரின் கடைசி ரன் மற்றும் விக்கெட்டை தமக்கு மிகவும் பிடித்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரவேண்டும் என்று விரும்பியே திடீரென இந்த முடிவு எடுத்ததாக ஸ்டுவர்ட் ப்ராட் தெரிவித்திருந்தார். அதற்கேற்றார் போல் 4வது நாள் ஆட்டம் துவங்கிய போது 9 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்துக்காக 2 ரன்களுடன் களமிறங்கிய அவர் மிட்சேல் ஸ்டார்க் வீசிய ஓவரின் கடைசி பந்தில் அட்டகாசமான சிக்ஸர் அடித்தார்.

- Advertisement -

ஆனாலும் அடுத்த ஓவரில் எதிர்ப்புறமிருந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களில் அவுட்டானதால் ஸ்டுவர்ட் ப்ராட் தம்முடைய கேரியரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து கடைசி இன்னிங்ஸில் 8* ரன்களில் நாட் அவுட்டாக விடை பெற்றார். குறிப்பாக யுவ்ராஜ் சிங்கிடம் 6 சிக்ஸர்கள் கொடுத்ததால் கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்ட அவர் தம்முடைய கேரியரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்தது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது.

அதே போல பந்து வீச்சிலும் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் தோல்வியை தவிர்க்க கடைசி நேரத்தில் அலெக்ஸ் கேரியுடன் டெயில் எண்டரான டோட் முர்ஃபி 18 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தார். அப்போது தொடர்ந்து துல்லியமாக வீசிய ப்ராட் 91வது ஓவரின் 5வது பந்தை வீசிய பின் ஸ்டம்பில் இருக்கும் பெய்ல்ஸ் அதிர்ஷ்டத்திற்காக மாற்றி வைத்தார். குறிப்பாக இதே போட்டியில் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஸ்ஷேன் பெய்ல்ஸை மாற்றி வைத்து அவுட்டாக்கிய மேஜிக்கை மீண்டும் அவர் முயற்சித்தார்.

- Advertisement -

அப்படி பெய்ல்ஸை மாற்றியதுடன் தம்முடைய திறமையையும் சேர்த்து பந்து வீசிய அவர் அடுத்த பந்திலேயே முர்ஃபியை அவுட்டாக்கி அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் போராடிய அலெக்ஸ் கேரியையும் கடைசி விக்கெட்டாக வீழ்த்தி இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தார். இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக தன்னுடைய கேரியரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து பவுலராக கடைசி பந்தில் விக்கெட்டையும் எடுத்து விடைபெற்ற முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையுடன் ஸ்டுவர்ட் ப்ராட் விடை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியிலும் விராட் கோலி விளையாட மாட்டாரா? – ஏன் தெரியுமா?

இதற்கு முன் மெக்கல்லம், மிஸ்பா போன்றவர்கள் தங்களுடைய கடைசி இன்னிங்ஸில் சதமடித்தும் முத்தையா முரளிதரன் போன்றவர்கள் தங்களுடைய கடைசி பந்தில் விக்கெட்டுகளை எடுத்தும் ஓய்வு பெற்றுள்ளார்கள். ஆனால் ப்ராட் மட்டுமே கடைசி பந்தில் சிக்ஸரும் விக்கெட்டையும் எடுத்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement