உங்களுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்னியா? இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராடை விளாசும் ரசிகர்கள் – காரணம் இதோ

Stuart Broad
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் சொந்த மண்ணில் தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்குள்ளான இங்கிலாந்து 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது. அதே போல 4வது போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்தின் வெற்றியை கடைசி நாளில் மழை வந்து தடுத்தது. அதனால் நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்து அசத்தியது.

அந்த நிலையில் சொந்த மண்ணில் தோல்வியை தவிர்ப்பதற்காக ஜூலை 27ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 283 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 (91) ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் போராடி முதல் இன்னிங்ஸ் 295 ரன்கள் குவித்து 2வது நாள் முடிவில் இங்கிலாந்தை விட 12 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

தக்காளி சட்னியா:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இத்தொடரின் 3வது போட்டியில் பந்தை அடித்து எதிர்கொண்டு விட்டு வெள்ளை கோட்டுக்குள் நிற்காமலேயே வெளியேறிய ஜானி பேர்ஸ்டோவை அலெக்ஸ் கேரி விதிமுறைக்குட்பட்டு ரன் அவுட் செய்ததை நேர்மைக்கு புறம்பான செயல் என ஒட்டுமொத்த இங்கிலாந்தினரும் விமர்சித்ததை மறக்க முடியாது.

அதிலும் குறிப்பாக தமது வாழ்நாளில் இது போன்ற நேர்மைக்கு புறம்பான செயலை பார்த்ததில்லை என ஸ்டுவர்ட் ப்ராட் விமர்சித்திருந்தார். ஆனால் இதற்கு முன் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் அஸ்டன் அகர் பந்தில் தெளிவான எட்ஜ் கொடுத்தும் நடுவர் அவுட் கொடுக்கவில்லை என்பதற்காக ஆஸ்கர் விருதை வெல்லும் அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நீங்கள் பேசலாமா என அவருக்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் பதிலடி கொடுத்தது வேறு கதை.

- Advertisement -

அந்த நிலையில் இந்த போட்டியில் 81 பந்துகளை எதிர்கொண்ட மார்னஸ் லபுஸ்ஷேன் வெறும் 9 ரன்களை மட்டுமே மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது மார்க் வுட் வீசிய 43வது ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்டு முடித்த அவர் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சம்பந்தமின்றி அவருடைய அருகே சென்ற ஸ்டுவர்ட் ப்ராட் ஸ்டம்ப்பில் இருந்த பெய்ல்ஸை எடுத்து தேவையின்றி மாற்றி வைத்து விட்டு சென்றார்.

அதனால் ஏன் அப்படி செய்கிறார் என்று குழம்பிய லபுஸ்ஷேன் பெய்ல்ஸை ஒரு முறை பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே அடுத்த பந்தை எதிர்கொண்டார். ஆனால் அதன் காரணமாக கவனத்தை இழந்த அவர் அடுத்த பந்திலேயே எட்ஜ் கொடுத்து அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மறுபுறம் “பெய்ல்ஸை ஏன் மாற்றி வைத்தேன் என்று இப்போது புரிகிறதா” என எதிர்ப்புறம் நின்று கொண்டிருந்த உஸ்மான் கவாஜாவிடம் ஆறுதல் தெரிவித்து விட்டு ஸ்டுவர்ட் ப்ராட் விக்கெட்டை கொண்டாடியது ஆஸ்திரேலிய ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

- Advertisement -

இது விதிமுறைக்கு எதிரானது கிடையாது என்றாலும் 2021 சிட்னி டெஸ்டில் ரிஷப் பண்ட் பேட்டிங் கார்ட்டை ஸ்மித் அழித்ததற்கு நிகரான நேர்மைக்கு புறமான செயல் என்றே சொல்லலாம். குறிப்பாக அந்த இடத்தில் ஸ்டுவர்ட் ப்ராட் வேண்டுமென்றே பேட்ஸ்மேனின் கவனத்தை சிதைக்கும் வகையில் பெய்ல்ஸை மாற்றியதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அத்துடன் ஒருவேளை இதே செயலை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் செய்திருந்தால் அது நேர்மைக்கு புறம்பானது என இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சித்திருப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs WI : பார்படாஸில் அச்சுறுத்த ரெடியாகும் மழை, 2வது போட்டி முழுதாக நடைபெறுமா? வெதர் ரிப்போர்ட் இதோ

ஆனால் இங்கிலாந்தை சேர்ந்தவர் அவ்வாறு செய்ததால் இதெல்லாம் உளி வைத்து செதுக்கிய மைண்ட் கேம்ஸ் என்று இங்கிலாந்து அணி நிர்வாகமும் ரசிகர்களும் ட்விட்டரில் அவரை கொண்டாடி வருகிறார்கள். அதனால் எங்களுக்கு வந்தா ரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என ஆஸ்திரேலிய ரசிகர்கள் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement