வீடியோ : கேமராவா மீது மோதி நிலைகுலைந்த தெ.ஆ வீரர் – ரசிகர்கள் வியப்பு, நடந்தது என்ன?

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய அந்த அணி முதல் போட்டியில் போராடித் தோற்று ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அதனால் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கும் சரிந்த அந்த அணி நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டிசம்பர் 26ஆம் தேதியன்று 2வது போட்டியில் களமிறங்கியது. ஆனால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் அனலாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு பதில் சொல்ல முடியாத தென்னாப்பிரிக்கா 189 ரன்களுக்கு சுருண்டது.

டீன் எல்கர் 26, எர்வீ 18, டீ ப்ருயன் 12, தெம்பா பவுமா 1, ஜோண்டோ 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக கெய்ல் வெரின் 52 ரன்களும் மார்கோ யான்சென் 59 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 1, மார்னஸ் லபுஸ்ஷேன் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினாலும் 3வது விக்கெட்டுக்கு 239 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் – ஸ்டீவ் ஸ்மித் சரிவை சரி செய்தார்கள்.

- Advertisement -

உருட்டு கட்டை கேமரா:
அதில் ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் தென் ஆப்பிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய டேவிட் வார்னர் 1086 நாட்கள் கழித்து சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து 16 பவுண்டரி 2 சிக்சருடன் இரட்டை சதம் விளாசினார். குறிப்பாக தன்னுடைய 100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்த அவர் கடைசியில் காயமடைந்து வெளியேறிய நிலையில் அடுத்து வந்த டிராவீஸ் ஹெட் 48* ரன்கள் எடுத்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தற்போது 386/3 எடுத்துள்ள ஆஸ்திரேலியா 197 ரன்கள் முன்னிலை வகிக்கும் நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் ரபாடா மற்றும் அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர். குறிப்பாக 16 ஓவர்கள் வீசியுள்ள நோர்ட்ஜெ 1 மெய்டன் உட்பட 50 ரன்களை கொடுத்து இதர பவுலர்களை காட்டிலும் 3.13 என்ற குறைவான எக்கனாமியில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். அப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் 2வது நாளில் பின்பகுதியில் உருட்டுக்கட்டையால் தாக்கியதை போல் மைதானத்தில் விழுந்தது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது.

- Advertisement -

அதாவது 176/2 என்ற நிலைமையுடன் ஆஸ்திரேலியா விளையாடிய போது கேப்டன் டீன் எல்கர் சொன்ன இடத்திற்கு ஃபீல்டிங் செய்வதற்காக அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் வழக்கமாக இயக்கப்படும் ஸ்பைடர் கேமரா ஏதோ ஒரு வகையில் அதை இயக்குபவர் கட்டுப்பாட்டை இழந்து அதிரடியான வேகத்தில் சென்றது. குறிப்பாக பெரும்பாலும் வீரர்களின் உயரத்திற்கு மேலே செல்லக்கூடிய அந்த கேமரா கட்டுப்பாட்டை இழந்ததால் தோள்பட்டை உயரத்துக்கு அன்றிச் நோர்ட்ஜெ பின்புறத்தில் வேகமாக வந்தது.

அதை அறியாத அவரை அதே வேகத்தில் சென்று தாக்கிய ஸ்பைடர் கேமரா கொஞ்சமும் நிற்காமல் கிழே விழாமல் தொடர்ந்து சென்றது. ஆனால் பின்பகுதியில் இருந்து உருட்டு கட்டை தாக்கியது போன்ற அழுத்தத்தை சந்தித்த அவர் திடீரென்று மைதானத்தில் விழுந்தார். அதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் என்னவாயிற்று என்று பதறிய நிலையில் களத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் அருகே சென்று அவரை சோதித்தனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாததால் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

இதையும் படிங்க: IND vs SL : இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

வரலாற்றில் நிறைய தருணங்களில் பந்துகளை இந்த கேமரா தடுத்ததை பார்த்துள்ளோம். ஆனால் முதல் முறையாக ஒரு வீரர் கீழே விழும் அளவுக்கு இவ்வாறு கேமரா வந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதனால் ஸ்பைடர் கேமரா இவ்வாறு தலை உயரத்திற்கு கீழே வரக்கூடாது என்று அன்றிச் நோர்ட்ஜெ போட்டியின் முடிவில் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Advertisement