இவருக்கு எங்கயோ மச்சம் இருக்குப்பா, 2 அல்வா அவுட்டில் அதிர்ஷ்டத்தால் தப்பிய ஷ்ரேயஸ் ஐயர் – சாதித்து காட்டுவாரா

bails Shreyas Iyer
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலாவதாக விளையாடிய ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. ஏனெனில் 2023 ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்ல இத்தொடரை வெல்ல வேண்டியது அவசியமாகியுள்ள நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி என்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் காலை 9 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 20 (40) – கேப்டன் கேரால் ராகுல் 22 (54) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். போதாக்குறைக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 1 ரன்னில் அவுட்டானதால் இந்தியா 48/3 என தடுமாற்றத் தொடக்கத்தைப் பெற்றது.

- Advertisement -

இருப்பினும் அடுத்து களமிறங்கிய ரிசப் பண்ட் மறுபுறம் நின்ற புஜாராவுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தமக்கே உரித்தான அதிரடியான ஸ்டைலில் விளையாடி 6 பவுண்டர் 2 சிக்ஸருடன் 46 (45) ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் புஜாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் வகையில் நிதானமாக ரன்களை சேர்த்தார். ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல மேலும் நங்கூரமாக நின்று உணவு மற்றும் தேநீர் இடைவேளையை கடந்து 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தி நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தது.

எங்கயோ மச்சம் இருக்கு:
குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக சாதனை படைத்த இவர்களில் நங்கூரமாக நின்று விளையாடிய புஜாரா 11 பவுண்டரியுடன் 90 (203) ரன்கள் எடுத்திருந்த போது கடைசி நேரத்தில் துரதிஷ்டவசமாக சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு அவுட்டானார். அதை தொடர்ந்து வந்த அக்சர் பட்டேல் 14 (26) ரன்களில் முதல் நாளின் கடைசி பந்தில் அவுட்டான நிலையில் இந்தியா 278/6 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 82* ரன்களுடன் களத்தில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் மிகப்பெரிய அதிர்ஷ்டத்துடன் விளையாடி வருகிறார் என்றே கூறலாம். ஏனெனில் நன்கு செட்டிலாகி அரை சதம் கடந்த அவர் 77 ரன்கள் எடுத்திருந்த போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் எபோதத் ஹொசைன் வீசிய ஒரு ஓவரின் ஒரு பந்தில் டிஃபன்ஸ் ஆட முயற்சித்து எட்ஜ் கொடுத்தார். அது ஆஃப் ஸ்டம்ப்பில் நன்றாகவே உரசி சென்றது. ஆனால் அதிர்ஷ்ட தேவதை அவரது அருகே இருந்த காரணத்தால் பெய்ல்ஸ் இரண்டும் கீழே விழவில்லை.

குறிப்பாக இடது பக்க பெய்ல்ஸ் லைட் எரிந்து கொண்டே கீழே விழுவதற்கு வந்தாலும் மனமில்லாமல் மீண்டும் ஸ்டம்ப்பிலேயே உட்கார்ந்து கொண்டது. அதை நன்றாக பார்த்த வங்கதேச வீரர்கள் குறிப்பாக எபோதத் ஹொசைன் இது அவுட் தான் லைட் கூட எரிந்தது என்று ஆச்சரியம் கலந்த வியப்புடன் ஷ்ரேயஸ் ஐயரிடம் சொன்னார். அதற்கு அவரோ தமக்கு இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் இருந்ததா என்பதை பெரிய திரையில் புஜாராவுடன் இணைந்து பார்த்தார்.

இதையும் படிங்க: IND vs BAN : சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த புஜாரா – ஷ்ரேயஸ் ஜோடி, முதல் நாளில் இந்தியாவின் ஸ்கோர் இதோ

முன்னதாக 67 ரன்களில் இருந்த போது பவுண்டரி அடிக்க முயற்சித்த ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த கேட்ச் நேராக எபோதத் ஹொசைன் கைகளுக்கு சென்றது. ஆனால் அல்வா போல வந்த அந்த பந்தை தவறவிட்டதால் தற்போது களத்தில் நிற்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த அடுத்தடுத்த அதிர்ஷ்டங்களை பயன்படுத்தி 2வது நாளில் சதமடித்து சாதித்து காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement