IND vs BAN : சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த புஜாரா – ஷ்ரேயஸ் ஜோடி, முதல் நாளில் இந்தியாவின் ஸ்கோர் இதோ

SHreyas Iyer vs BAN
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தாலும் 3வது போட்டியில் பெரிய வெற்றியை சுவைத்து ஒய்ட் வாஷ் அவமான தோல்வியை தவிர்த்த இந்தியா அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா டிசம்பர் 14ம் தேதியன்று சட்டோகிராம் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் களமிறங்கிய இந்திய அணிக்கு இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் நிதானத்தை காட்ட முயற்சித்தாலும் தவறான ஸ்வீப் ஷாட் அடித்து 20 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வழக்கம் போல தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 22 (54) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த விராட் கோலி 1 (5) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

சாதனை பார்ட்னர்ஷிப்:
அதனால் 48/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவை மறுபுறம் நின்ற செட்டேஸ்வர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்த ரிஷப் பண்ட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 46 (45) ரன்கள் எடுத்து அவுட்டனர். அந்த நிலையில் வந்த ஷ்ரேயஸ் ஐயர் மறுபுறம் இருந்த புஜாராவுடன் இணைந்து நங்கூரமாக நின்று இந்தியாவை வலுப்படுத்தும் வகையில் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

நேரம் செல்ல செல்ல வங்கதேச பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு இருபுறமும் ரன்களை குவித்த இந்த ஜோடி தேநீர் இடைவேளையை கடந்து விக்கெட் விடாமல் 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தியது. குறிப்பாக 203 பந்துகளை எதிர்கொண்டு சதத்தை நெருங்கிய புஜாரா துரதிஷ்டவசமாக 11 பவுண்டரியுடன் 90 ரன்களில் கடைசி நேரத்தில் போல்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தலாக பேட்டிங் செய்த நிலையில் அடுத்து வந்த அக்சர் பட்டேல் 2 பவுண்டரியுடன் 14 (26) ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் மெகதி ஹசனிடம் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் கடைசியில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 278/6 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் 10 பவுண்டரியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் 82* (169) ரன்களில் இருக்கும் நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 3* விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டானதால் 48/3 என தடுமாறிய இந்தியா 278/6 ரன்கள் எடுப்பதற்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த புஜாரா – ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி முக்கிய காரணமாக அமைந்தது.

சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையைப் படைத்து அவர்கள் இப்பபோட்டியில் இந்தியாவை மீட்டெடுத்தார்கள் என்றே சொல்லலாம். இதற்கு முன்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மயங் அகர்வால் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட்டின் சிஸ்டத்தை ஐபிஎல் தாக்கிடுச்சு, இதை உங்களால் மறுக்க முடியுமா? ப்ராட் ஹோக் விமர்சிக்கும் காரணம் என்ன

மேலும் இப்போட்டியில் முதல் நாளன்றே ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக மாற துவங்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் நாட்களில் ஆதிக்கம் செலுத்தி இப்போட்டியை வெல்வதற்கு நாளைய 2வது நாளில் 400+ ரன்களை எடுப்பதற்கு இந்தியா போராட வேண்டியது அவசியமாகிறது.

Advertisement