ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பையில் தற்போது முதல் சுற்று நடைபெறும் நிலையில் அக்டோபர் 22ஆம் தேதி துவங்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றில் களமிறங்கும் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற முதன்மை அணிகள் பயிற்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் 19ஆம் தேதியன்று பிரிஸ்பேன் நகரில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கிய முதல் பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் போராடி 154/6 ரன்கள் சேர்த்தது.
அந்த அணிக்கு சாசாய் 9, குர்பாஸ் 0 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் மிடில் ஆர்டரில் ரசூலி 3, நஜிபுல்லா ஜாட்ரான் 6 என முக்கிய வீரர்கள் மீண்டும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 81/5 என திணறிய அந்த அணிக்கு இப்ராஹிம் ஜாட்ரான் 35 (34) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றி நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன் முகமது நபி 5 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியான 51* (37) ரன்களும் உஸ்மான் காணி 32* (20) ரன்களும் குவித்து தூக்கி நிறுத்தினர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஹரிஷ் ரௌஃப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்தியாவுக்கு எச்சரிக்கை:
அதை தொடர்ந்து 155 ரன்களை துரத்திய பாகிஸ்தான் 2.2 ஓவரில் 19/0 என்ற நிலையில் விளையாடிக் கொண்டிருந்த போது ஜோராக வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தி ரத்து செய்ய வைத்தது. முன்னதாக இப்போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய பாகிஸ்தானின் இளம் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 2 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக பந்து வீசினார். இடதுகை பந்து வீச்சாளராக புதிய பந்தில் ஸ்விங் செய்து மிரட்டும் திறமை பெற்றுள்ள அவர் முதல் ஓவரிலேயே 5வது பந்தில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் காலை குறி பார்த்து துல்லியமான யார்க்கர் பந்தை வீசினார்.
அவரது குறி தப்பாத நிலையில் தன்னுடைய குறையை தவற விட்ட குர்பாஸ் பந்தை தடுக்காமல் விட்டார். அதனால் சுமார் 140+ கி.மீ அதிரடியான வேகத்தில் வந்த அந்த பந்து நேராக அவருடைய முன் பாதத்தை பதம் பார்த்தது. அப்போது அஃப்ரிடி அவுட் கேட்ட நிலையில் அம்பயரும் யோசிக்காமல் கை உயர்த்தினார். ஆனால் பெவிலியன் திரும்ப வேண்டிய ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ் காலில் சந்தித்த காயத்தால் அதிகமான வலியை உணர்ந்ததால் நடக்க முடியாமல் அப்படியே மைதானத்தில் உட்கார்ந்து துடித்தார்.
அதன் காரணமாக உடனடியாக மருத்துவ குழுவினர் மைதானத்திற்குள் வந்து அவரை சோதித்து முதலுதவி செய்த போதிலும் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் நம்முடைய உள்ளூரில் சிறுவர்கள் நண்பனை உப்பு மூட்டை தூக்குவது போல் அவரை தூக்கிக்கொண்டு பெவிலியன் சென்றார். இதைப் பார்க்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களுடைய நம்பர் ஒன் பந்துவீச்சாளர் இந்த அளவுக்கு காயத்திலிருந்து குணமடைந்து பார்முக்கு திரும்பியுள்ளதற்காக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
மறுபுறம் இந்த காயத்தை சோதிப்பதற்காக குர்பாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி ஆப்கானிஸ்தான் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. ஆனால் இந்தியா போன்ற எதிரணியின் ரசிகர்கள் இந்த சம்பவத்தை பார்த்து சற்று கலக்கமடைகிறார்கள். ஏனெனில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இதே போல அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்க கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் துரதிஷ்டவசமாக காயத்தால் வெளியேறிய அவர் தற்போது குணமடைந்து அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார். அதற்கு முன்பாக இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ள அவர் மெல்போர்ன் நகரில் இதே போல் தன்னுடைய அனலான பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்ற மறைமுகமான எச்சரிக்கையை இந்திய வீரர்களுக்கு கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.



