வீடியோ : இது உங்க ஊர்ல அவுட்டா? சொந்த நாட்டை மண்ணை கவ்வ வைத்த பிரபல பாக் அம்பயர், டிகே முதல் பாபர் அசாம் வரை அதிருப்தி

Saud Shakeel
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து தார் ரோடு போல இருந்த ராவல்பிண்டி மைதானத்தில் அதிரடியாக செயல்பட்டு 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் இத்தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டிசம்பர் 9ஆம் தேதி முல்தானில் துவங்கிய 2வது போட்டியில் பாகிஸ்தான் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 281 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பென் டன்கட் 63 ரன்களும் ஓலி போப் 60 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அறிமுகப் போட்டியிலேயே அசத்திய அப்ரார் அகமது அருகபட்சமாக 7 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்களும் சவுத் ஷாகீல் 63 ரன்களும் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 141/2 என்ற நல்ல நிலையில் இருந்தாலும் அவர்கள் அவுட்டானதும் சீட்டு கட்டு போல் சரிந்து 202 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் 4 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 79 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் விளையாடிய அந்த அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

வெற்றியை பறித்த அவுட்:
அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 108 ரன்கள் எடுக்க மீண்டும் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 355 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 66 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அசாத் சபிக் 45 ரன்களும் முகமத் ரிஸ்வான் 30 ரன்களும் எடுத்து அவுட்டான போது கேப்டன் பாபர் அசாம் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இமாம்-உல்-ஹக் 60 ரன்களில் அவுட்டானாலும் அவருடன் ஜோடி சேர்ந்து நங்கூரமாக நின்ற சவுத் ஷாகீல் 4வது நாள் வரை நிலையாக நின்று 94 (213) ரன்கள் குவித்து பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

PAK vs ENG

ஆனால் உணவு இடைவெளிக்கு முந்தைய கடைசி ஓவரில் மார்க் வுட் வீசிய ஒரு பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்த அவர் எட்ஜ் கொடுத்தார். லெக் திசையில் வந்த அந்த பந்தை இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஓலி போப் தாவிப் பிடித்தார். அதனால் இங்கிலாந்து வீரர்கள் கொண்டாடிய நிலையில் அதில் சந்தேகமடைந்த களத்தில் இருந்த நடுவர்கள் 3வது நடுவரை அணுகினார்கள். அதிலும் குறிப்பாக அந்த தருணத்தில் முதல் அம்பயராக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல அம்பயர் அலீம் தார் மற்றொரு நடுவர் மரைஸ் ஏராஸ்மஸ் உடன் விவாதித்து பின்னர் அதை “அவுட் என்று சாஃப்ட் சிக்னல் கொடுத்து” 3வது நடுவரை அணுகினார்.

- Advertisement -

அதை சோதித்துப் பார்த்த 3வது நடுவர் ஜோயல் வில்சன் “பந்துகளுக்கு கீழே கை விரல்கள் இருப்பதாக தெரிந்தாலும் என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை” என்று பேசினார். அப்படியே சில நிமிடங்கள் சோதித்த அவர் இறுதியில் முழுமையான ஆதாரங்கள் கிடைக்காத போதிலும் களத்தில் இருந்த நடுவர்கள் “சாஃப்ட் சிக்னல்” அவுட் கொடுத்து விட்டதால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்காமல் இறுதியில் அவுட் கொடுத்தது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

அதனால் வெற்றியும் பறிபோனது போல் அதன் பின் எஞ்சிய விக்கெட்டுகளை அரை மணி நேரத்தில் இழந்த பாகிஸ்தான் 328 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது. அதன் காரணமாக இப்போட்டியில் பாகிஸ்தானை விட ஆரம்பம் முதலே அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடிய இங்கிலாந்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

ஆனால் பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்கும் போது அது அவரது கையின் நுனியிலிருந்து தரையில் பட்டது. மேலும் கைகள் பந்துக்கு அடியில் இல்லை. அதனால் அது அவுட்டில்லை என்று ரசித் லதீப், வாக்கார் யூனிஸ் ஏராளமான முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகிறார்கள். குறிப்பாக களத்தில் இருந்த அலீம் தார் சாஃப்ட் சிக்னல் அவுட் கொடுத்தது அந்தத் தீர்ப்பில் முக்கிய பங்காற்றியது.

அதனால் சொந்த நாட்டுக்கு பங்கத்தை விளைவிப்பதை போல் செயல்பட்ட அவரை பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இறுதியில் கேப்டன் பாபர் அசாமும் அது தான் தோல்விக்கு காரணமென்று போட்டியின் முடிவில் பேசினார். அப்படியானால் எதற்கு 3வது அம்பையர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement