இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022/23 சீசன் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அதில் ஜனவரி 17ஆம் தேதியன்று டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 102வது லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மகிழ்ச்சியில் 9 பவுண்டரிகளை பறக்க விட்ட பிரித்வி ஷா 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக 40 (35) ரன்கள் குவித்து அவுட்டானார்.
ஆனால் அவருக்கு பின் அரமான் ஜாபர் 2, முசிர் கான் 14, கேப்டன் அஜிங்கிய ரகானே 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 66/4 என சரிந்த அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நாயகன் சர்பராஸ் கான் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்காத வெறியில் மீண்டும் நங்கூரமாக நின்று எதிரணிக்கு சவாலாக மாறி ரன்களை சேர்த்தார். அவருக்கு கை கொடுக்க முயன்ற பிரசாத் பவார் 25 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த சம்ஸ் முலானியுடன் சேர்ந்த சர்பராஸ் கான் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார்.
தேர்வுக்குழுவுக்கு சவுக்கடி:
குறிப்பாக 6வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையை ஓரளவு மீட்டெடுத்த இந்த ஜோடியில் எதிர்ப்புறம் நங்கூரமாக நின்று 39 (103) ரன்கள் எடுத்த சம்ஸ் முலானி ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் டெல்லிக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த சர்பராஸ் கான் 16 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 125 (155) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் 293 ரன்களுக்கு மும்பையை ஆல் அவுட்டாக்கிய டெல்லி சார்பில் அதிகபட்சமாக ப்ரான்சு விஜய்ரன் 4 கிரிக்கெட்டில் எடுத்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டமும் நிறைவுக்கு வந்தது.
இப்போட்டியில் பவுலிங்க்கு சாதகமாகவும் பேட்டிங்க்கு சவாலாகவும் இருந்த டெல்லி மைதானத்தில் மிடில் ஆடரில் களமிறங்கி நங்கூரமாக நின்ற சர்பிராஸ் கான் கிட்டத்தட்ட மும்பை எடுத்த ரன்களில் பாதியை தனி ஒருவனாக குவித்து மீண்டும் தன்னுடைய திறமையும் தரத்தையும் நிரூபித்தார். இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் கடந்த 2019 முதல் ரஞ்சிக்கோப்பையில் தொடர்ந்து மிரட்டலாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 53 இன்னிங்ஸில் 9 சதங்கள் 12 அரை சதங்கள் உட்பட 3380 ரன்களை மெஷினாக எடுத்து வருகிறார்.
குறிப்பாக உலக அளவில் முதல் தர கிரிக்கெட்டில் 50 இன்னிங்ஸில் விளையாடிய வீரர்களுக்கு மத்தியில் ஜாம்பவான் டான் பிராட்மேனனுக்கு (105.4) பின் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட வீரர் (82.6) என்ற சாதனையும் படைத்துள்ள அவர் தொடர்ந்து தேர்வு குழுவினரின் கதவை தட்டி வருகிறார். ஆனாலும் அவரை புறக்கணிக்கும் தேர்வுக்குழு அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தேர்வு செய்யாதது யாரையுமே திருப்தி செய்யவில்லை.
Hundred and counting! 💯
Yet another impressive knock from Sarfaraz Khan 👏👏
Follow the Match ▶️ https://t.co/sV1If1IQmA#RanjiTrophy | #DELvMUM | @mastercardindia pic.twitter.com/GIRosM7l14
— BCCI Domestic (@BCCIdomestic) January 17, 2023
Coach Amol Mazumdar knows how Sarfaraz Khan will be feeling. pic.twitter.com/XjiPRbVUA1
— Sportizens (@Sportizens_in) January 17, 2023
ஆனால் அவரை விட 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டுள்ள சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிசான் ஆகியோர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அசத்துகிறார்கள் என்பதற்காக தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களை கோபமடைய வைத்தது. மேலும் இந்திய டெஸ்ட் அணிக்கு இந்திய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் அசத்தும் வீரரை விட்டுவிட்டு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களை தேர்வு செய்த சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதையும் படிங்க: தோனியிடம் இருந்து தான் நான் அந்த வித்தையை கத்துக்கிட்டேன் – மொயின் அலி வெளிப்படை
சொல்லப்போனால் கடந்த வருட ரஞ்சிக்கோப்பை ஃபைனலில் சதமடித்த போது கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவீர்கள் என்று சேட்டன் சர்மா வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும் சர்ப்ராஸ் கான் சமீபத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் மனம் தளராமல் போராடும் அவர் மீண்டும் சதமடித்து தேர்வு குழுவிற்கு சவுக்கடி கொடுத்து வெறித்தனமாக தன்னுடைய சதத்தை கொண்டாடிய போது மும்பை அணியின் பயிற்சியாளர் அமோல் மசும்தார் தன்னுடைய தொப்பியை கழற்றி தலை வணங்கிய ரியாக்சன் வைரலாகி வருகிறது.