வீடியோ : அண்டர்-19 உ.கோ வென்ற மகளிரணிக்கு பரிசுத்தொகை வழங்கி – சச்சின் பாராட்டி பேசியது இதோ

Sachin Tendulkar
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டில் அண்டர்-19 உலக கோப்பையை ஐசிசி இந்த வருடம் அறிமுகப்படுத்தியது. கடந்த 2000 முதல் ஆடவர் கிரிக்கெட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரால் யுவராஜ் சிங் முதல் விராட் கோலி வரை ஏராளமான ஜாம்பவான்கள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட்டிலும் முதல் முறையாக அதை டி20 உலக கோப்பையாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 14இல் தென்னாபிரிக்காவில் துவங்கிய அந்த உலகக்கோப்பையில் உலகம் முழுவதிலுமிருந்து 16 அணிகள் பங்கேற்ற நிலையில் ஏற்கனவே 15 வயதில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி லேடி சேவாக் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷபாலி வர்மா தலைமையில் இந்தியா களமிறங்கியது.

அவரது தலைமையில் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா, அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனால் ரன் ரேட் உதவியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா காலம் காலமாக ஆடவர் கிரிக்கெட்டிலேயே சவாலை கொடுத்து வரும் நியூசிலாந்தை அரையிறுதியில் தோற்கடித்தது. அதைத்தொடர்ந்து ஜனவரி 29ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் இங்கிலாந்தை 68 ரன்களுக்கு சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

சச்சின் பாராட்டு:
1983லயே ஆடவர் கிரிக்கெட்டில் கபில் தேவ் தலைமையில் முதல் உலகக் கோப்பையை வென்ற இந்தியா மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் விளையாடியும் இதுவரை ஒரு கோப்பையை கூட வென்றதில்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த கோப்பையை வென்ற மகளிர் அணி சீனியர் கிரிக்கெட் அணிக்கே பாடத்தை கற்பித்து சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியாவுக்கு சேர்த்தது.

அந்த வகையில் மகளிர் கிரிக்கெட்டில் வளமான எதிர்காலத்திற்கு ஆழமான விதை போட்ட இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்படுவதாகவும் அதை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேரில் வந்து கொடுத்து கௌரவிப்பார் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். அந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய 3வது டி20 போட்டி துவங்குவதற்கு முன்பாக ரோஜார் பின்னி, ராஜிவ் சுக்லா, ஜெய் ஷா ஆகியோருடன் இணைந்து 5 கோடி ரூபாயை இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கினார்.

- Advertisement -

அத்துடன் சச்சின் சச்சின் என முழக்கமிட்ட அகமதாபாத் ரசிகர்களை நலம் விசாரித்த அவர் மகளிர் அணியை பாராட்டி பேசியது பின்வருமாறு. “ஹாய் அகமதாபாத், எப்படி இருக்கீங்க? முதலில் அண்டர்-19 உலக கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்ன ஒரு அற்புதமான சாதனை. இந்த வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் இந்திய கிரிக்கெட்டின் நலத்தை விரும்பும் ஒவ்வொருவரும் அடுத்து வரும் காலங்களில் நினைத்து பெருமைப்படுவார்கள் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். 1983இல் நான் 10 வயதாக இருக்கும் போது என்னுடைய கனவு துவங்கியது”

“இந்த வெற்றியை சாதிப்பதற்கு கடந்த காலங்களில் வித்திட்ட முன்னாள் வீராங்கனைகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக டயானா எடுல்ஜி, அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜ் ஜுலன் போன்ற நிறைய பேர் உள்ளனர். இந்த உலகக் கோப்பையை வென்று நமது நாட்டில் இருக்கும் ஏராளமான இளம் பெண்கள் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கனவை நீங்கள் ஏற்படுத்தியுள்ளீர்கள்”

இதையும் படிங்க: அடுத்த நாளே கெளதம் கம்பீருக்கு பேட்டால் பதிலடி கொடுத்த சுப்மன் கில் – கலாய்க்கும் ரசிகர்கள், நடந்தது என்ன

“மேலும் விரைவில் மகளிர் ஐபிஎல் துவங்குவது மிகப்பெரிய அம்சமாகும். விளையாட்டில் மகளிர் ஆடவர் ஆகிய இருவருக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை இந்த வெற்றியை சாத்தியமாக்கிய மகளிர் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Advertisement