அடுத்த நாளே கெளதம் கம்பீருக்கு பேட்டால் பதிலடி கொடுத்த சுப்மன் கில் – கலாய்க்கும் ரசிகர்கள், நடந்தது என்ன

shubman gill gautam gambhir
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வந்த டி20 தொடரில் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் போராடி வென்று சமன் செய்தது. அதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக செயல்பட்டு 20 ஓவரில் 234/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் நியூசிலாந்து பவுலர்களை பந்தாடிய சுப்மன் கில் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 126* (63) ரன்கள் விளாசினார். அதைத்தொடர்ந்து 235 ரன்களை சேசிங் செய்த நியூசிலாந்து இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 66 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 35 (25) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 4 விக்கெட்களை எடுத்தார். அதனால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்து 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணி என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 126* ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

கம்பீருக்கு பதிலடி:
கடந்த 2018 அண்டர்-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிகள் தொடர் நாயகன் விருது வென்ற அவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் வெளியேறிய அவர் 2021ஆம் ஆண்டு மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து அசத்தியதால் மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.

அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற தொடர்களில் அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்திய அவர் நல்ல பார்மில் இருந்த காரணத்தால் ஒரு வழியாக 3 வருடங்கள் கழித்து கடந்த நவம்பர் மாதம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இருப்பினும் ஆரம்பக்கட்ட வாய்ப்பில் சுமாராக செயல்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்து அசத்தினார். மறுபுறம் அதே வங்கதேச ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த இசான் கிசானுக்கு பதிலாக அடுத்ததாக நடைபெற்ற இலங்கை தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுப்பது சரியல்ல என்ற விமர்சனங்கள் இருந்தன.

- Advertisement -

ஆனால் இலங்கை ஒருநாள் தொடரில் சதமடித்த அவர் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்து இசான் கிசானுக்கு கொஞ்சமும் குறைந்தவன் அல்ல என்பதை நிரூபித்து விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். இருப்பினும் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 5 போட்டிகளிலுமே தடுமாறிய அவர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் 2022 ஐபிஎல் தொடரில் கூட அதிக ரன்களை குவித்தாலும் அதை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுப்பது அவருக்கு ஆரம்பம் முதலே ஒரு பிரச்சினையாக இருந்து வந்தது.

அந்த நிலைமையில் சுப்மன் கில் விளையாடும் ஆட்டமும் அவரது பேட்டிங் ஸ்டைலும் இயற்கையாகவே ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்று இந்த போட்டிக்கு முன்பாக முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். மறுபுறம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் பிரிதிவி ஷா பேட்டிங் இயற்கையாகவே டி20 கிரிக்கெட்டுகாக உருவாக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: IND vs NZ : இதுக்கு மேலையும் இவர் தேவையா? சொந்த மண்ணிலேயே 2 மோசமான தடவல் சாதனைகளை படைத்த இஷான் கிசான்

அப்படி சொல்லி 48 மணி நேரங்கள் கூட முடியாத நிலைமையில் இந்த போட்டியில் சதமடித்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 126* (63) ரன்களை குவித்துள்ள சுப்மன் கில் தம்மால் டி20 கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்று கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் வழக்கம் போல கௌதம் கம்பீரை இந்திய வீரர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து தள்ளுகிறார்கள்.

Advertisement