அடுத்தடுத்த ரிவியூக்களை வீணடித்த ஜடேஜா – கடுப்பில் பிரபல ஹிந்தி கெட்ட வார்த்தையால் திட்டிய ரோஹித் சர்மா

Jadeja Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று மிரட்டிய இந்தியா மார்ச் ஒன்றாம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியிலும் வென்று ஜூலை மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்சிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக 100% தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாளிலேயே தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் முதல் நாள் முடிவில் 156/4 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் 2வது நாளில் பீட்டர் ஹேண்ட்ஸகோம்ப் 19, கேமரூன் கிரீன் 3, அலெஸ் கேரி 3 என எஞ்சிய 6 வீரர்களை அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்கள் வீதம் சொற்ப ரன்களில் சாய்த்து ஆஸ்திரேலியாவை 197 ரன்களுக்கு சுருட்டினர்.

- Advertisement -

திட்டிய ரோஹித்:
முதல் நாளிலேயே ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இருப்பினும் கூட இந்தியாவை விட முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 88 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு ரவீந்திர ஜடேஜாவின் சொதப்பல் முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக டிராவிஸ் ஹெட்டை 9 ரன்களுக்கு அவுட்டாக்கிய அவர் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேனை நோ பாலில் டக் அவுட்டாக்கினார். அதை பயன்படுத்திய அவர் உஸ்மான் கவாஜாவுடன் 2வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 31 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா 88 ரன்கள் முன்னிலை பெறுவதில் முக்கிய பங்காற்றியது.

அதை விட டிராவிஸ் ஹெட்டை எல்பிடபிள்யூ முறையில் ரவீந்திர ஜடேஜா அவுட் கேட்டும் நடுவர் அவுட் கொடுக்காததால் இந்தியா ரிவ்யூ எடுத்தது. அதில் வெற்றிகரமாக அவுட் கிடைத்ததால் நோ-பாலில் தவற விட்ட லபுஸ்ஷேன் மற்றும் கவாஜாவை அடுத்த சில ஓவர்களில் எல்பிடபிள்யு முறையில் மீண்டும் ஜடேஜா அவுட் கேட்டார். ஆனால் அப்போது நடுவர் அவுட் கொடுக்காத நிலையில் ரவீந்திர ஜடேஜா ரிவியூ எடுக்குமாறு கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும் அது அவுட் இருக்காது என்று கருதிய ரோகித் சர்மா ரிவியூ எடுக்க விரும்பவில்லை.

- Advertisement -

ஆனால் முதல் விக்கெட்டை எடுத்தது போல் அவுட் கிடைக்க வாய்ப்பிருப்பதாக ரவீந்திர ஜடேஜா அழுத்தத்துடன் உறுதியாக வற்புறுத்தியதால் வேறு வழியின்றி கேப்டன் ரோகித் சர்மா நம்பி ரிவ்யூ எடுத்தார். ஆனால் டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய ரிவியூ தவிர்த்து ரவீந்திர ஜடேஜாவின் பேச்சைக் கேட்டு எடுத்த அடுத்தடுத்த 3 ரிவ்யூக்களும் இந்தியாவுக்கு தோல்வியையே கொடுத்தது. அதனால் கடுப்பான ரோகித் சர்மா 3வது ரிவ்யூ தோல்வியடைந்த சமயத்தில் “அப்போவே நான் சொன்னானே கேட்டியா, இப்பவாது பந்து எங்கே பிட்ச் ஆகிறது என்பதை நன்றாக பார்” என்ற சொற்களுடன் பிரபல ஹிந்தி கெட்ட வார்த்தையில் ஜடேஜாவை வெளிப்படையாக திட்டினார்.

அதை சரியாக கவனித்த ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரவீந்திர ஜடேஜாவை கலாய்த்து வருகிறார்கள். இது எல்லை மீறிய பேச்சு என்றாலும் கிட்டத்தட்ட சக வயதுடைய கேப்டன் மற்றும் வீரருக்கிடையே இந்தியாவுக்காக வெற்றி பெற வேண்டிய அனல் பறக்கும் களத்தில் சகஜமான ஒன்றாகும்.

இதையும் படிங்க: IND vs AUS : 3 ஆவது போட்டி நடைபெற்று வரும் இந்தூர் மைதானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவுள்ள ஐ.சி.சி – எதற்கு தெரியுமா?

அப்படி ரவீந்திர ஜடேஜா 3 ரிவியூக்களையும் முதல் மணி நேரத்திலேயே வீணடித்ததால் முதல் நாளின் கடைசி அரை மணி நேரத்தில் ஓரிரு முறை ரவிச்சந்திரன் அஸ்வின் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்க நினைத்த போது ரிவியூ கையிருப்பு இல்லாமல் ரோகித் சர்மாவும் இந்தியாவும் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement