வீடியோ : கபில்தேவ் போல் பறந்து தொடரின் சிறந்த கேட்ச் பிடித்து தெ.ஆ கதையை முடித்த நெதர்லாந்து வீரர் – குவியும் பாராட்டுகள்

Van der Merwe Catch
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் நவம்பர் 6ஆம் தேதியன்று அதிகாலை இந்திய ரசிகர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது உண்மையாகவே மிகப்பெரிய எதிர்பாராத திருப்பம் அரங்கேறியது. ஆம் 5.30 மணிக்கு நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த நெதர்லாந்தை நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 158/4 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு ஸ்டீபன் மைபர்க் 37 (30) மேக்ஸ் ஓ’தாவுத் 29 (31) டாம் கூப்பர் 35 (19) கோலின் அக்கர்மேன் 41* (26) கேப்டன் எட்வர்ட்ஸ் 12* (7) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 159 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய குவின்டன் டீ காக் 13 (13) கேப்டன் பவுமா 20 (20) ரிலீ ரோசவ் 25 (19) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

- Advertisement -

கபில் தேவ் போல:
அதனால் 64/3 என தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மற்றொரு முக்கிய வீரர் ஐடன் மார்க்கம் 17 (13) ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். அப்போது காப்பாற்றுவார் என கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் வழக்கம் போல நங்கூரத்தை போட்டு ஆரம்பத்தில் மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதனால் 100 ரன்களைக் கடந்து வெற்றியை நோக்கி தென் ஆப்பிரிக்கா பயனளித்த வேளையில் பிரண்டன் க்ளோவர் வீசிய 16வது ஓவரின் 2வது பந்தை டேவிட் மில்லர் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனதை அவர் தவறாக கணித்ததால் எட்ஜ் வாங்கிய அந்த பந்து நேராக வானத்தில் பறந்து கேட்ச்சாக மாறியது.

அப்போது உள் வட்டத்திற்குள் நின்று கொண்டிருந்த நெதர்லாந்து வீரர் ரோல்ஆப் வேன் டெர் மெர்வி அங்கிருந்து 15 – 20 அடிகள் ஓடி சென்று சரிந்து கொண்டே அற்புதமான கேட்ச்சை பிடித்து தென்னாப்பிரிக்காவின் கருப்பு குதிரையான டேவிட் மில்லரை அவுட் செய்து போட்டியில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதை பயன்படுத்திய நெதர்லாந்து அடுத்ததாக க்ளாஸென் 21 (18) வேன் பர்னல் 0 (2) கேசவ் மகாராஜ் 13 (12) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் காலி செய்து சரித்திர வெற்றியை பதிவு செய்து தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

- Advertisement -

அந்த வெற்றிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய வேன் டெர் மெர்வி பிடித்த கேட்ச் எவ்வளவு கடினம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கிராம் ஸ்வான் வெளிப்படையாக பாராட்டினார். மேலும் அவர் பிடித்த அந்த கேட்ச் கடந்த 1983 உலகக்கோப்பை பைனலில் விவ் ரிச்சர்ட்ஸ் கொடுத்த கேட்ச்சை நீண்ட தூரம் ஓடி சென்று பிடித்து கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் பிடித்ததற்கு சமமானது என்று இந்திய ரசிகர்கள் பாராட்டும் நிலையில் அது இந்த தொடரின் சிறந்த கேட்ச் என்று பெரும்பாலான ரசிகர்களும் மனதார பாராட்டுகிறார்கள்.

இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவெனில் தென்னாபிரிக்காவில் பிறந்த வேன் டர் மெர்வி இன்று அந்த அணிக்கு எதிராக இப்படி சிறப்பாக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளார். மறுபுறம் காலம் காலமாக இது போன்ற முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ள தென்னாப்பிரிக்கா இந்த தோல்வியால் மீண்டும் ஒருமுறை தன்னை சோக்கர் என நிரூபித்து வெளியேறியது.

இதையும் படிங்க : IND vs ZIM : எந்தவொரு சிரமும் இன்றி ஜிம்பாப்வேவை சம்பவம் செய்த இந்தியா – இவ்வளவு பெரிய வெற்றியா?

ஆனால் இந்த வெற்றியால் ஜிம்பாப்வேவை சந்திக்காமலேயே 3வது அணியாக அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. அதை விட தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் அதிர்ஷ்டமான வாய்ப்பை பெற்ற பாகிஸ்தான் தனது கடைசி போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து இந்தியாவுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement