IND vs ZIM : எந்தவொரு சிரமும் இன்றி ஜிம்பாப்வேவை சம்பவம் செய்த இந்தியா – இவ்வளவு பெரிய வெற்றியா?

IND vs ZIM Hardik Pandya Bhuvneswar Kumar Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. அதில் குரூப் 1 பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேறிய நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் குரூப் 2 பிரிவிலிருந்து நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த நெதர்லாந்தை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.

அதனால் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டமான வாய்ப்பை பெற்ற பாகிஸ்தான் தன்னுடைய கடைசி போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து அரையிறுதிக்குள் 4வது அணியாக நுழைந்தது. அதே காரணத்தால் முன்னதாகவே 3வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா தன்னுடைய சம்பிரதாய கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 20 ஓவர்களில் 186/5 ரன்கள் குவித்து மிரட்டியது.

- Advertisement -

இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ரோகித் சர்மா 15 (13) ரன்கள் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி மற்றொரு தொடக்க வீரர் ராகுலுடன் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 26 (25) ரன்களில் அவுட்டானார். அவருக்குப் பின் ராகுல் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51(13) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து வந்த ரிஷப் பண்ட் 3 (5) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

மிரட்டிய இந்தியா:
ஆனால் 4வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 5வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது அவருடன் விளையாடிய ஹர்திக் பாண்டியா 18 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் ஜிம்பாப்வே பவுலர்களை அடித்து நொறுக்கிய சூரியகுமார் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 61* (15) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ்2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மாதவேர் கோல்டன் டக் அவுட்டாக அர்ஷிதீப் சிங் வீசிய அடுத்த ஓவரில் சக்கப்வா டக் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அதனால் 2/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு கேப்டன் கிரைக் எர்வின் 13 (15) சீன் வில்லியம்ஸ் 11 (18) முன்யோங்கா 5 (4) என முக்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தனர். அத்துடன் மிடில் ஆர்டரில் ரியன் பர்ல் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (22) ரன்களும் சிக்கந்தர் ராசா 3 பவுண்டரியுடன் 34 (24) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 17.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்த ஜிம்பாப்வே வெறும் 115 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அளவுக்கு ஆரம்பம் முதலே கட்டுக்கோப்பாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். அதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை விட (+1.028) அதிக ரன் ரேட்டையும் பெற்று (+1.319) முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு துறையில் தடுமாறாமல் செயல்பட்ட இந்தியா எவ்வித சிரமமும் இன்றி பெரிய வெற்றியை சுவைத்தது. அதன் காரணமாக ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த இங்கிலாந்தை வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Advertisement