வீடியோ : முதலில் சஞ்சு சாம்சனுக்கு 10 மேட்ச் சான்ஸ் கொடுத்துட்டு பேசுங்க – வைரலாகும் ரவி சாஸ்திரியின் பழைய வீடியோ

Sanju Samson Ravi Shastri
- Advertisement -

நியூசிலாந்துக்கு பயணித்துள்ள இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த பின் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் அதிரடியாக செயல்பட்ட இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா உட்பட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் வழக்கம் போல முதல் பந்திலிருந்தே சரவெடியாக செயல்பட்டு 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 111* (51) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அதனால் இந்தியா நிர்ணயித்த 192 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

முதலில் சான்ஸ் கொடுங்க:
அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 61 (52) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 4 விக்கெட்களை எடுத்தார். முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியை இந்த தொடரிலிருந்து இந்திய அணி நிர்வாகம் துவங்கியுள்ளது. ஆனால் முதல் போட்டியிலேயே பழைய பஞ்சாங்கத்தை போல் மீண்டும் இளம் வீரர் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது அனைத்து ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

ஏனெனில் கடந்த 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019ஆம் ஆண்டு விளையாடிய கொடுமையை சந்தித்த அவரை கடந்த ஜூலை மாதம் வரை 2 வருடத்திற்கு ஒருமுறை 6 மாதத்திற்கு ஒருமுறை என இந்திய அணி நிர்வாகம் குப்பையை போல் பயன்படுத்தியது. இருப்பினும் ரசிகர்களின் தொடர்ச்சியான கேள்வியால் இந்த வருடம் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்ற அவர் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்தால் அசத்துவேன் என்று நிரூபித்தும் டி20 உலக கோப்பையில் ரிசர்வ வீரர்கள் பட்டியலில் கூட இடம் பெறவில்லை.

- Advertisement -

சரி இதற்கு முந்தைய கேப்டன்கள் தான் அப்படி என்று பார்த்தால் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலாவது அவருக்கு நிலையான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. மாறாக ரிசப் பண்ட் போன்ற காலம் காலமாக சொதப்பி வருபவருக்கு ராஜாவைப் போல் ஓப்பனிங்கில் இடம் கிடைத்துள்ளது. இதனால் மைதானத்திலும் சமூக வலைதளங்களிலும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் இந்திய நிர்வாகம் செய்யும் அநியாயத்திற்கு எதிராகவும் ரசிகர்கள் போர் கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் முதலில் குறைந்தபட்சம் 10 போட்டிகளிலாவது வாய்ப்பு கொடுங்கள் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி சமீபத்திய உலகக் கோப்பையின் போது பேசிய ஒரு பழைய வீடியோவை டிரெண்ட் செய்து சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வீடியோவில் ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு.

“அவருக்கு வாய்ப்பு கொடுங்கள். குறைந்தபட்சம் 10 போட்டிகளிலாவது வாய்ப்பு கொடுங்கள். ஆனால் 2 போட்டியில் அவருக்கு வாய்ப்பளித்து விட்டு பின்னர் நீக்குவது போன்ற வேலையை செய்யாதீர்கள். அதற்கு பதிலாக மற்றவர்களை நீக்கி விட்டு அவருக்கு 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுங்கள். அதன் பின் அவருக்கு மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுங்கள்” என்று நிதர்சனமாக பேசியுள்ளார்.

Advertisement