இலங்கையில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துள் தலைமையில் விளையாடி வரும் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது. அந்த நிலையில் ஜூலை 19ஆம் மதியம் 2:00 மணிக்கு கொழும்புவில் நடைபெற்ற தன்னுடைய கடைசி லீக் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தான் ஏ அணியை இந்தியா ஏ அணி எதிர்கொண்டது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களிலேயே தடுமாறிய சைம் ஆயுப் 3வது ஓவரில் ராஜவர்தன் ஹங்கர்கேகர் வீசிய 2வது பந்தின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அத்தோடு நிற்காத ராஜ்வர்தன் அதே ஓவரின் கடைசி பந்தில் அடுத்ததாக வந்து தடுமாறிய ஒமைர் யூசுஃபையும் டக் அவுட்டாக்கி பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே மிரட்டலை கொடுத்தார்.
அசத்தும் இந்தியா:
அதனால் 9/2 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சித்த மற்றொரு தொடக்க வீரர் பர்ஹான் 35 (36) ரன்கள் எடுத்திருந்த போது ரியான் பராக் சுழலில் அவுட்டாகி சென்றார். அதனால் மேலும் சரிந்த அந்த அணியை மிடில் ஆர்டரில் காப்பாற்ற போராடிய கம்ரான் குலாமை 22வது ஓவரின் 4வது பந்தில் 15 (31) ரன்களில் ஸ்டம்ப்பிங் செய்த இளம் வீரர் மாணவ் சுதர் அதே ஓவரின் கடைசி பந்தில் மறுபுறம் சவாலை கொடுத்த ஹசிபுல்லா கானையும் 27 (55) ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.
அதனால் 78/5 என பாதி சரிந்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது ஹாரீஸ் 14 (13) ரன்களில் அவுட்டாகி கைவிட்ட நிலையில் லோயர் மிடில் ஆர்டரில் காசிம் அக்ரம் போராடி 48 (63) ரன்கள் எடுத்த போது மீண்டும் ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் அவுட்டாக்கி முகமத் வாசிம் 8, சன்வாஸ் தகாணி 4 என டெயில் எண்டர்களையும் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தார். அதற்கிடையே முப்சர் கான் 28 ரன்கள் மெஹரன் மும்தாஜ் 25* ரன்கள் எடுத்த போதிலும் இந்தியாவின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவர்களிலேயே வெறும் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் ஆரம்பம் முதலே துல்லியமாக செயல்பட்ட இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 8 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 42 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். மகாராஷ்டிராவுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட துவங்கி கடந்த 2022 அண்டர்-19 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தை ஈர்த்த அவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டும் விளையாடும் வாய்ப்பு பெறவில்லை.
இருப்பினும் இந்த வருடம் தீபக் சஹர் காயமடைந்த சமயத்தில் 2 போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார். அந்த வகையில் இந்த போட்டியிலும் அசத்திய அவருடன் மாணவ் சுதர் 3 விக்கெட்டுகளையும் ரியன் பராக் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
இதையும் படிங்க:IND vs WI : முதல் டெஸ்டில் அவர் ஆடிய பேட்டிங்கை பாத்து இளம் வீரர்கள் கத்துக்கனும் – விக்ரம் ரத்தோர் பேட்டி
அதனால் கிட்டத்தட்ட வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்த இந்தியா ஏ அணி தற்போது 206 ரன்களை துரத்தி வருகிறது. அதிலும் சற்று முன் வரை தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவதால் விக்கெட் இழப்பின்றி 43/0 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இப்போட்டியில் வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.