வீடியோ : 98 ரன்னில் சனாகாவை மன்கட் செய்த ஷமியை விளாசும் ரசிகர்கள் – மறுத்த ரோஹித்துக்கு குவியும் பாராட்டுக்கள்

Shami Mankad Rohit Sharma
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. ஜனவரி 10ஆம் தேதியன்று கௌகாத்தியில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 373/7 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக 143 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சுப்மன் கில் 70 (60) ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 83 (67) ரன்களும் குவித்தனர்.

அவர்களுடன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45வது சதத்தை விளாசி 113 (87) ரன்கள் குவித்து அவுட்டானார். சுமாராக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஞ்சிதா 3 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய அந்த அணிக்கு பெர்னாண்டோ 5, குசல் மெண்டிஸ் 0, அசலங்கா 23 என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

தேவையற்ற மன்கட்:
அதனால் 64/3 என தடுமாறிய அந்த அணியின் வெற்றிக்கு போராடிய தொடக்க வீரர் 72 ரன்களும் டீசில்வா 47 ரன்களும் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானதால் தோல்வி உறுதியானது. இருப்பினும் மிடில் ஆர்டரில் வழக்கம் போல கேப்டன் தசுன் சனாக்கா சவாலை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அவர் வெற்றி பறிபோனாலும் குறைந்தபட்சம் சதத்தை நெருங்கி கடைசி ஓவரில் 98 ரன்களில் பேட்டிங் செய்தார்.

அதனால் அவருடைய சதத்துடன் போட்டி நிறைவு பெறும் என்ற அனைவரும் முடிவுக்காக காத்திருந்த நிலையில் கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி 4வது பந்தில் எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார் என்பதற்காக சனக்காவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதன் காரணமாக போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுடன் சனாக்கா ஏமாற்றமடைந்த நிலையில் அதை சோதிப்பதற்காக நடுவரும் 3வது நடுவரை அணுகினார். இருப்பினும் அப்போது வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் “மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடும் அவரை சதமடிக்க விடாமல் அவுட்டாவதற்கு இது சரியான வழியல்ல” என்று சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் பேசி சமாதானப்படுத்தினார்.

- Advertisement -

அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி தாமாகவே நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்த சனாக்கா 108* (88) ரன்கள் குவித்த போதிலும் 50 ஓவர்களில் இலங்கை 306/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரின் முன்னிலை வகிக்கும் இந்தியாவுக்கு அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக இப்போட்டியில் வெற்றி உறுதியான பின்பும் கடைசி ஓவரில் சிறப்பாக விளையாடி 98 ரன்களில் இருந்த இலங்கை கேப்டனை சதமடிக்க விடாமல் தடுக்க நேரடியாக அவுட் செய்ய முடியாமல் மன்கட் முறையில் அவுட் செய்த முகமது ஷமியின் செயலுக்கு நிறைய இந்திய ரசிகர்களை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வெற்றி இரு பக்கத்திற்கும் சமமாக இருக்கும் போது மன்கட் செய்திருக்க வேண்டும் அல்லது சனாக்கா 60, 70 போன்ற ரன்களில் இருந்த போது மன்கட் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் வெற்றி உறுதியான பின்பு சதமடிக்க விடக்கூடாது என்ற எண்ணத்துடன் இவ்வாறு செய்வது சரியல்ல என சமூக வலைத்தளங்களில் ஷமியை விமர்சிக்கிறார்கள்.

இதையும் படிங்கIND vs SL : தனி ஒருவனாக மீண்டும் மிரட்டிய சனாக்கா, கடைசி நேர மன்கட் பரபரபுக்கு மத்தியில் இந்தியா வென்றது எப்படி

அதையே போட்டியின் முடிவில் “சிறப்பாக விளையாடிய சனாக்காவை நாங்கள் அந்த வழியில் அதுவும் 98 ரன்னில் அவுட் செய்ய விரும்பவில்லை” என்று ரோகித் சர்மா தெரிவித்தார். அந்த வகையில் வெற்றி பறிபோனாலும் தனி ஒருவனாக போராடி தகுதியான சதத்தை நெருங்கிய சனாகாவுக்கு எதிரான மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.

Advertisement