வீடியோ : தோல்வியால் பென் ஸ்டோக்ஸ்’க்கு கை கொடுக்க மறுத்த பாக் வீரர் – நாகரீகமற்ற செயலால் ரசிகர்கள் அதிருப்தி

Ben Stokes vs PAk
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அற்புதமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்த இங்கிலாந்து 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகு முறையுடன் விளையாடும் அந்த அணி இது வரை சொந்த மண்ணில் மட்டுமே வென்ற நிலையில் தற்போது வெளிநாட்டு மண்ணிலும் சாதித்து காட்டி அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஏனெனில் முதல் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி மைதானத்தில் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் முதல் நாளிலேயே 506 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்து சரியான சமயத்தில் 2வது இன்னிங்ஸை டிக்ளர் செய்து 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தான் கிரிக்கெட் மைதானத்திலும் விக்கெட் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி 26 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதனால் 2000ஆம் ஆண்டுக்குப்பின் 22 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள அந்த அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் எதிரணிகளுக்கு முன்னோடியாக மாறியுள்ளது.

- Advertisement -

நாகரீகம் இல்ல:
மறுபுறம் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஏற்கனவே சமீபத்தில் டி20 தொடரை 4 – 3 (7) என்ற கணக்கில் இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கோப்பையை கோட்டை விட்ட நிலையில் தற்போது டெஸ்ட் தொடரிலும் அடி வாங்கியுள்ளது. இப்படி இங்கிலாந்திடம் அடுத்தடுத்த தோல்விகளை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில் நேற்றைய 2வது போட்டி முடிந்ததும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வழக்கம் போல எதிரணிக்கு கை கொடுக்க வந்தார்.

குறிப்பாக கடைசி விக்கெட்டாக நின்ற பாகிஸ்தான் வீரர் முகமது அலியிடம் தாமாக சென்று பென் ஸ்டோக்ஸ் கையை கொடுத்தார். அதற்கு கையை கொடுக்க மறுத்த அவர் ஏதோ சில வார்த்தைகளை சொன்னதால் சரி வேண்டாம் என்று பின் வாங்கிய பென் ஸ்டோக்ஸ் “ஏன்டா இவரிடம் கையை கொடுக்க சென்றோம்” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்து தனது அணியுடன் சென்று இணைந்து கொண்டார். இந்த நிகழ்வை பார்த்த ரசிகர்கள் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்ற நிலையில் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பதால் அதில் தோல்வியாடைந்தாலும் கையை கொடுப்பது வழக்கம் என்ற நாகரீகம் உங்களுக்கு தெரியாதா என சமூக வலைதளங்களில் முகமது அலியை விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

இருப்பினும் அந்த சமயத்தில் கடைசி விக்கெட் உறுதியாகாத காரணத்தால் பெரிய திரையில் முடிவு வரும் வரை தாங்கள் தோற்கவில்லை என்பதையே பென் ஸ்டோக்ஸிடம் தெரிவித்த முகமது அலி அதன் காரணமாகத் தான் கையை கொடுக்க மறுத்ததாக சில பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். இறுதியில் பெரிய திரையில் அவுட் என்று வந்ததும் அவர் மீண்டும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததாகவும் பாகிஸ்தான் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளுக்கு இனியும் அவர் செட்டாவார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்ல – சபா கரீம் வெளிப்படை

மொத்தத்தில் ரசிகர்களை திரும்பிப் பார்க்க இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இதை தொடர்ந்து தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி வரும் டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் நடைபெறுகிறது. முன்னதாக இப்போட்டியில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் தொடரை இழந்தது மட்டுமல்லாமல் அடுத்த வருடம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement