வீடியோ : சோம்பேறித்தனமாக செயல்பட்டதால் நூலிழையில் பரிதாபமாக ரன் அவுட்டான நியூஸிலாந்து வீரர்

RUn OUT
- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து முதல் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த நிலைமையில் சொந்த மண்ணில் குறைந்தபட்சம் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் பிப்ரவரி 24ஆம் தேதியன்று துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வழக்கம் போல அதிரடியாக செயல்பட்டு 435/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 186 (176) ரன்களும் ஜோ ரூட் 153* (224) ரன்களும் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 4 விக்கெட்களை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 209 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. அதிகபட்சமாக கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் டிம் சவுதி 5 பவுண்டரி 6 சிக்சருடன் 73 (39) ரன்கள் விளாச இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட் எடுத்தார். அதைத்தொடர்ந்து இங்கிலாந்து பாலோ ஆன் கொடுத்ததால் மீண்டும் பேட்டிங் செய்த நியூசிலாந்து இம்முறை மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு போராடி 483 ரன்கள் குவித்து அவுட்டானது.

- Advertisement -

சோம்பேறித்தனத்தால் அவுட்:
அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் கேன் வில்லியம்சன் சதமடித்து 132 ரன்கள் எடுக்க டாம் லாதம் 83, டேவோன் கான்வே 61, டார்ல் மிட்சேல் 54, டாம் ப்ளன்டல் 90 என முக்கிய வீரர்கள் முடிந்தளவுக்கு போராடி நல்ல ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 248 என்ற இலக்கை துரத்தி வரும் இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 48/1 என்ற நிலையுடன் வெற்றி பெறும் தருவாயில் விளையாடி வருகிறது.

முன்னதாக இப்போட்டியில் சரிந்த நியூசிலாந்தை அற்புதமான சதமடித்து தூக்கி நிறுத்திய கேன் வில்லியம்சன் அவுட்டான பின் களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சமீபத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு போட்டியில் அடித்த நொறுக்கிய அவர் ஜேக் லீச் வீசிய 159வது ஓவரின் ஒரு பந்தை எதிர்புறமிருந்த டாம் ப்ளண்டல் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்து 3 ரன்கள் எடுக்க அழைத்த போது வேகமாக ஓடினார்.

- Advertisement -

அதில் முதலிரண்டு ரன்களை வேகமாக ஓடி நிறைவு செய்த அவர் 3வது ரன்னில் முக்கால்வாசி தூரம் ஓடி வந்த போது “இனிமேல் என்ன ஆகிவிடப் போகுது” என்ற அஜாக்கிரதையான எண்ணத்துடன் சோம்பேறித்தனமாக வெள்ளை கோட்டை கடந்தார். ஆனால் அப்போது இங்கிலாந்து பீல்டர் வேகமாக எறிந்ததால் தன்னிடம் வந்த பந்தை சாதாரணமாக நடந்து வந்து ஒற்றை கையில் பிடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் பிடித்த வேகத்திலேயே தாமதிக்காமல் ஸ்டம்பின் மீது அடித்தார். அதனால் ஒருவேளை அவுட் இருக்குமோ என்ற சந்தேகத்துடன் அவரது தலைமையிலான இங்கிலாந்து அணியினர் நடுவரை நாடினார்கள்.

அதைத் தொடர்ந்து பெரிய திரையில் சோதிக்கப்பட்ட போது மைக்கேல் பிரேஸ்வெல் முழுமையாக வெள்ளை கோட்டுக்கு உள்ளே வந்தும் காலை தரையில் ஊன்றுவதற்குள் விக்கெட் கீப்பர் பெய்ல்ஸை எடுத்தது தெளிவாக தெரிந்தது. அதை விட வழக்கமாக பேட்டை தரையில் தேய்த்துக் கொண்டே வர வேண்டிய பேட்ஸ்மேன் ஜாக்கிரதையாக சோம்பேறித்தனமாக தரையில் தொடாமல் பேட்டை கையில் தூக்கிக் கொண்டே ஓடி வந்தார்.

இதையும் படிங்க: கே.எல் ராகுல், அக்சர் படேலை தொடர்ந்து இன்று திருமணம் செய்துள்ள இந்திய வீரர் – நேரில் சென்று வாழ்த்திய ரோஹித்

மொத்தத்தில் விக்கெட் கீப்பர் பெய்ல்ஸை எடுக்கும் போது பேட்ஸ்மேன் முழுமையாக வெள்ளை கோட்டுக்கு உள்ளே இருந்தும் அவருடைய எந்த உடல் பகுதி அல்லது பேட் வெள்ளைக்கோட்டை தொடாத காரணத்தால் நடுவர் அவுட் என்று அறிவித்தார். அதை பார்த்த இங்கிலாந்து அணியினர் போராடாமலேயே பரிசாக இப்படி ஒரு விக்கெட் கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் ஏமாற்றத்துடன் வெளியேறிய மைக்கேல் பிரேஸ்வேலை சுமாராக விளையாடியதாக வழக்கம் போல வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

Advertisement