விக்கெட் விழுந்துருச்சு எழுந்திருய்யா, ஃபைனலில் தூங்கிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் – தட்டி எழுப்பிய சிராஜ்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் அதிரடியான சதமடித்து 163 ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க சுமாராக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் வெறும் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் ரோஹித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 71/4 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு ரகானேவுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய ரவீந்திர ஜடேஜா 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் ஃபாலோ ஆனை தவிர்க்க 119 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட இந்தியாவை 3வது நாளில் பரத் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

தூங்கிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன்:
இருப்பினும் 6வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அட்டகாசமாக செயல்பட்ட ரகானே 89 ரன்களும் சர்துள் தாக்கூர் 51 ரன்களும் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்க்க உதவினர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 173 முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய டேவிட் வார்னர் 3வது ஓவரில் முகமது சிராஜ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பரத்திடம் எட்ஜ் கொடுத்து 1 ரன்னில் அவுட்டானார்.

அப்போது அடுத்ததாக களமிறங்க வேண்டிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் வருகிறாரா என்பதை போகஸ் செய்வதற்காக கேமராவை பெவிலியன் நோக்கி கேமராமேன் திருப்பினார். ஆனால் அப்போது போட்டியை பார்க்காமல் எதிரில் இருந்த இரும்பு தூண்கள் மீது ஹாயாக காலை வைத்திருந்த அவர் தூங்கிக் கொண்டிருந்தது கேமராவில் தெரிந்தது. இருப்பினும் வார்னரின் விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள் வழக்கம் போல ஆரவாரம் செய்ததால் திடீரென என்ன சத்தம் என்று எழுந்த அவர் “ஓ விக்கெட் விழுந்து விட்டதா” என்ற வகையில் அவசர அவசரமாக பேட்டை எடுத்துக்கொண்டு களமிறங்க வந்தார்.

- Advertisement -

நல்லவேளையாக கால்கள் மற்றும் உடல்களில் தேவையான உபகரணங்களை ஏற்கனவே அணிந்து தயாராக இருந்த காரணத்தால் அடுத்த சில நொடிகளிலேயே அவர் களமிறங்கி வந்தார். ஆனாலும் 173 ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏற்கனவே சுமாராக பந்து வீசும் இந்திய பவுலர்களை “டேவிட் வார்னரே அடித்து விடுவார் நாம் எளிதில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை வராது” என்று இந்தியாவை குறைத்து மதிப்பிட்ட காரணத்தாலேயே அவர் அவ்வாறு தூங்கினார் என்றே சொல்லலாம்.

ஆனால் முதல் இன்னிங்ஸில் பின்தங்கினாலும் 2வது இன்னிங்ஸில் போராட்டத்தை துவங்கிய இந்தியாவிற்கு ஆரம்பத்திலேயே வார்னரின் விக்கெட்டை எடுத்த முகமது சிராஜ் “எங்கள் நாட்டுக்கு நான் போராட தயாராக இருக்கிறேன் நீங்கள் நிம்மதியாக தூங்காமல் எழுந்து வாருங்கள்” என அவரை தட்டி எழுப்பினார் என்று ரசிகர்கள் கலாய்கின்றனர். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான மார்னஸ் லபுஸ்ஷேன் இந்த மாபெரும் ஃபைனலில் தூங்கிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருப்பினும் தூக்கத்தில் எழுந்து நடந்து வந்தாலும் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் அவர் இதுவரை 35* ரன்கள் எடுத்து சவாலை கொடுத்து வருகிறார். மறுபுறம் கவாஜா 13, ஸ்டீவ் ஸ்மித் 34 என முக்கிய வீரர்களை குறைந்த ரன்களுக்கு இந்தியா அவுட்டாக்கி போராடும் நிலையில் ஆஸ்திரேலிய 90/3 ரன்கள் எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement