வீடியோ : என்னாங்க பெரிய ரஷீத் கான், 7வது இடத்தில் களமிறங்கி ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசி பழி வாங்கிய தெ.ஆ இளம் வீரர்

Marco Yansen
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக ஜொலிக்கும் ஐபிஎல் தொடரை பார்த்து பல வெளிநாடுகளில் டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே மசான்சி லீக் என்ற பெயரில் தென்னாபிரிக்க வாரியம் நடத்திய டி20 தொடர் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் மனம் தளராமல் சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் என்ற பெயரில் புதிய தொடரை அந்நாட்டு வாரியம் துவங்கியுள்ளது. அதில் ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்துள்ள சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணி நிர்வாகங்கள் இத்தொடரில் விளையாடும் மொத்த 6 அணிகளையும் வாங்கியுள்ளது. அந்த நிலையில் இத்தொடரின் முதல் சீசன் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதில் ஜனவரி 17ஆம் தேதியன்று நடைபெற்ற 12வது லீக் போட்டியில் எம்ஐ கேப் டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. அழகிய மலைத்தொடர்களைப் பின்புலத்தில் கொண்டுள்ள தென்னாபிரிக்காவின் மிகவும் அழகான நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கேப் டவுன் 20 ஓவரில் 171/6 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கிரேண்ட் ரோல்ஆப்சென் 56 (36) ரன்களும் ரியன் ரிக்கேல்டன் 46 (36) ரன்களும் எடுக்க கடைசி நேரத்தில் ஓடின் ஸ்மித் 25* (13) போட்கிடெர் 21* (13) ரன்களும் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

என்னாங்க பெரிய ரஷீத் கான்:
சன்ரைசர்ஸ் சார்பில் அதிகபட்சமாக மெர்வீ மற்றும் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு ரோஸிங்டன் 11, ஜேஜே ஸ்மட்ஸ் 4, எர்வீ 18, கேப்டன் ஐடன் மார்க்ரம் 12, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 28 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஜோப்ரா ஆர்ச்சர், ரபாடா, ரஷீத் கான் ஆகிய நட்சத்திர பந்து வீச்சாளர்களிடம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனால் 12.1 ஓவரில் 91/5 என சரிந்த அந்த அணிக்கு மேற்கொண்டு பேட்ஸ்மேன் இல்லாததால் கதை முடிந்ததாகவே கருதப்பட்டது.

ஆனால் அந்த சமயத்தில் களமிறங்கிய தென்னாபிரிக்க இளம் ஆல் ரவுண்டர் மார்க்கோ யான்சன் யாருமே எதிர்பாராத வகையில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சவாலை கொடுத்தார். ஆரம்பத்தில் செட்டிலாக கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்ட அவர் உலகின் நம்பர் ஒன் டி20 சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷீத் கான் வீசிய 16வது ஓவரில் 6, 4, 6, 6, 0, 6 என என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்டு வர்ணனையாளர்களையும் ரசிகர்களையும் வாய் பிளக்க வைத்தார்.

- Advertisement -

குறிப்பாக “என்னாங்க பெரிய ரஷீத் கான்” என்ற வகையில் ஒரே ஓவரில் அசால்ட்டாக 28 ரன்களை விளாசி தெறிக்க விட்டு போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்திய மார்கோ யான்சென் அந்த தன்னம்பிக்கையுடன் அடுத்ததாக ராபாடா வீசிய 17 மற்றும் 19வது ஓவரில் 2, 4, 6, 6, 6 என மேலும் அதிரடி பவுண்டரிகளை பறக்க விட்டு வெற்றியை உறுதி செய்து ராபாடாவிடம் அவுட்டானார். இருப்பினும் மொத்தமாக வெறும் 27 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்ஸருடன் 66 ரன்களை 244.44 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவரது முரட்டுத்தனமான அடியால் தோல்வியிலிருந்து தப்பிய சன்ரைசர்ஸ் 19.3 ஓவரில் 172/8 ரன்கள் குவித்து வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மறுபுறம் வெற்றியை கையில் வைத்திருந்த எம்ஐ அணிக்கு சாம் கரண், ரஷீத் கான் ஆகியோர் கடைசி நேரத்தில் சொதப்பி 11க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக ரஷீத் கான் 4 ஓவரில் அரிதாக அரை சதம் கடந்து 53 ரன்கள் கொடுத்த நிகழ்வு இப்போட்டியில் அரங்கேறியது. அப்படி அசால்டாக வந்து வெறித்தனமாக ரசித் கானை அடித்து நொறுக்கிய மார்கோ யான்செனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வியந்து பாராட்டுகிறார்கள்.

இதையும் படிங்க: இதுல என்ன ஜோக் வேண்டிருக்கு, இஷான் கிசான் சேட்டையை விளாசும் சுனில் கவாஸ்கர் – நடந்தது என்ன

அதை விட 2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஒரு போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது மார்கோ யான்செனை 6, 1, 6, 0, 6, 6 என அடித்து நொறுக்கிய ரஷீத் தான் குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார். தற்போது அவர் அதற்கு பழிக்கு பழி வாங்கி விட்டதாகவும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

Advertisement