கிரிக்கெட்டின் மெக்காவில் ஜாம்பவான் வார்னேவுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கெளரவம் – முழுவிவரம்

Shane Warne ENg vs NZ
Advertisement

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 2-ஆம் தேதியான நேற்று உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Nz vs Eng

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே இங்கிலாந்தின் மூத்த நட்சத்திரம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மாட்டி போட்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து கடும் நெருக்கடி கொடுத்தனர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் டாம் லாதம் 1, வில் யங் 1, கேப்டன் கேன் வில்லியம்சன் 2, டேவோன் கான்வே 3 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

வார்னேவுக்கு மரியாதை:
அதனால் 12/4 என சுருண்ட நியூசிலாந்துக்கு டார்ல் மிட்சேல் 13, டாம் ப்ளன்டால் 14 என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் பின்னாடியே பெவிலியன் திரும்பினர். அதனால் 30/6 என நியூசிலாந்து திணறிய போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மிகப் பெரிய நிகழ்வு நடந்தது. ஆம் சமீபத்தில் மறைந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வரலாற்றின் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவை கௌரவிக்கும் வகையில் அவருக்காக ஸ்பெஷலாக போட்டி நிறுத்தப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

வரலாற்றில் லெக் ஸ்பின் பந்துவீச்சில் புதிய பரிணாமங்களை கொண்டுவந்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் தனது மாயாஜால சுழலால் திணறடித்த மகத்தான சுழல்பந்து வீச்சாளராக கருதப்படும் வார்னே இங்கிலாந்து மண்ணில் பலமுறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்து பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக கடந்த 1993இல் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மண்ணில் முதல் முறையாக அவர் களமிறங்கி பந்து வீசிய முதல் போட்டியின் முதல் பந்திலேயே இங்கிலாந்தின் மைக் கேட்டிங்கை தனது மாயாஜால சுழலால் கிளீன் போல்ட் செய்தார்.

- Advertisement -

23 நொடிகள் பாராட்டு:
நாளடைவில் அந்தப் பந்து தான் 20-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்தாக வல்லுநர்களால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட அற்புதமான வார்னே எப்போதும் 23 நம்பரை கொண்ட ஜெர்ஸியை அணிந்து சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 1001 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்தார். அதை நினைவில் கொண்டு அவரை பாராட்டும் வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் 23 ஓவர்கள் முடிந்த போது 23 நொடிகள் போட்டி முழுமையாக நிறுத்தப்பட்டு இரு அணி வீரர்களும் களத்தில் வரிசையாக நின்று அவருக்கு கைதட்டி கௌரவ நினைவு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை எழுந்து நின்று 23 நொடிகள் கைதட்டுமாறு லார்ட்ஸ் மைதான நிர்வாகம் ஒலிபெருக்கியில் அறிவித்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த அத்தனைபேரும் 23 நொடிகள் வார்னேவுக்கு எழுந்து நின்று கைதட்டி கவுரவித்து பாராட்டி நினைவஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் ஓய்வுக்குப்பின் வர்ணனையிலும் அசத்திய வார்னேவை கவுரவிக்கும் வகையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த வர்ணனையாளர் அறைக்கு “தி ஷேன் வார்னே கமெண்டரி பாக்ஸ்” என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மேலும் கெளரவம் சேர்க்கப்பட்டது.

திணறும் இங்கிலாந்து:
அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு மேலும் பதில் சொல்ல முடியாத நியூசிலாந்து 132 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக காலின் டீ கிரான்ஹோம் 42* ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மாட்டி போட்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்தும் நியூசிலாந்தின் அதிரடியான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 116/7 என திணறி வருகிறது.

Advertisement