வீடியோ : வெற்றி கொண்டாத்திலும் சக வீரர்களை மதித்து தலைவன் என்பதை நிரூபித்த ஜோஸ் பட்லர் – பாராட்டும் ரசிகர்கள்

England World Cup
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோவலாக துவங்கி எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தேவையான வெற்றிகளுடன் ஃபைனலுக்கு வந்த பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து 2010க்குப்பின் 2வது கோப்பையை கோப்பையை வென்று டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.

மறுபுறம் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து தோற்கடித்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு வந்தது. அதனால் 1992இல் இதே போல் இம்ரான் கான் தலைமையில் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும் அதன்பின் மீண்டெழுந்து அதிர்ஷ்டத்தின் உதவியுடன் நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது போல் நிச்சயம் பாகிஸ்தான் வெல்லும் என்று அந்நாட்டவர்கள் பகல் கனவு கண்டனர்.

- Advertisement -

ஆனால் கடைசி நேர ட்விஸ்ட் போல அதற்கேற்றார் போல் செயல்பட தவறிய பாகிஸ்தானை அதே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தோற்கடித்த இங்கிலாந்து 30 வருடங்கள் கழித்து பழி தீர்த்து கோப்பையை முத்தமிட்டது. அப்படி 2வது கோப்பையை வென்ற இங்கிலாந்து டி20 உலக கோப்பை வரலாற்றில் வெற்றிகரமான அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை சமன் செய்தது. அதை விட கடந்த 2019இல் 50 ஓவர் உலக கோப்பையையும் வென்ற அந்த அணி தற்போது 20 உலகக் கோப்பையும் வென்றுள்ளது.

கொண்டாடத்திலும் மரியாதை:
இதன் வாயிலாக ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் ஆகிய 2 உலகக் கோப்பைகளையும் ஒரே நேரத்தில் வென்ற அணி என்ற புதிய வரலாற்று உலக சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது. இந்த சாதனைகளின் பரிசாக கொடுக்கப்பட்ட வெற்றி கோப்பையை கையில் வாங்கியதும் வழக்கம் போல அனைத்து இங்கிலாந்து வீரர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

- Advertisement -

ஆனால் அந்த மெய் மறந்த தருணத்திலும் தன்னுடைய அணி வீரர்களான மொயின் அலி மற்றும் அடில் ரசித் ஆகியோர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மதுவை மேலே ஊற்றிக் கொண்டாடும் கொண்டாட்டத்தை விரும்ப மாட்டார்கள் என்பதை உணர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் விழிப்புடன் செயல்பட்டார். அதாவது முதலில் புகைப்படம் எடுக்கும் கொண்டாட்டத்தில் மட்டும் அவர்களை அருகே வைத்திருந்த ஜோஸ் பட்லர் மது பாட்டில்களை பீய்ச்சி அடித்துக் கொண்டாடுவதற்கு சில நொடிகள் முன்பாக அடில் ரசித், மொயின் அலி ஆகிய இருவரையும் அங்கிருந்து நகர்ந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

அதனால் அவர்கள் முழுமையாக நகர்ந்து சென்ற பின் ஜோஸ் பட்லரும் இதர இங்கிலாந்து அணியினரும் ஒரு சில நொடிகள் காத்திருந்து வழக்கம் போல கொண்டாடித் தீர்த்தார்கள். பொதுவாகவே விளையாட்டு என்பது இனம், மொழி, மதம் என்ற அனைத்தையும் தாண்டி அனைவரையும் ஒன்றாக இணைக்கக் கூடிய மாபெரும் சக்தியாகும். அதில் வெற்றி கண்ட போது சக அணி வீரர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளித்து நடந்து கொண்ட கேப்டன் ஜோஸ் பட்லரை தற்போது சமூக வலைத்தளங்களில் பாராட்டிய வருகிறார்கள்.

பொதுவாகவே ஒரு கேப்டன் என்பவர் தன்னுடைய அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரின் திறமையும் குணத்தையும் அறிந்தால் மட்டுமே அவர்களுடைய சிறந்த செயல்பாட்டை வெளிக்கொண்டு வந்து வெற்றி காண முடியும். அந்த வகையில் களத்தில் சக வீரர்களின் திறமைகளை அறிந்து வெற்றி கண்ட ஜோஸ் பட்லர் அவர்களுடைய மத நம்பிக்கைக்கும் மதிப்பளித்து கேப்டன் என்பதையும் தாண்டி தன்னை நல்ல மனிதன் என்பதை நிரூபித்துள்ளார். அவருடைய கேப்டன்ஷிப் திறமைக்கும் மனிதனை மதிக்கும் குணத்திற்குமே இந்த உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஜோஸ் பட்லர் தகுதியானவர் என்றே கூறலாம்.

Advertisement