வீடியோ : தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? முதல் ஓவரிலேயே தைரியமாக வித்யாசமாக மிரட்டிய ஜோ ரூட் – தடுமாறும் இங்கிலாந்து

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூலை 16ஆம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/3 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் தைரியமாக டிக்ளர் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 118* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குறிப்பாக டிராவிஸ் ஹெட் 50, கேமரூன் கிரீன் 38, அலெக்ஸ் கேரி 66, பட் கமின்ஸ் 38 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை முக்கிய ரன்களை எடுத்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக நின்று சதமடித்த மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 141 ரன்களை விளாசி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார். ஆனால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரு திசைகளிலும் தலா 3 வீரர்களை நிறுத்தி சிங்கிள் கூட எடுக்க முடியாத அளவுக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வித்தியாசமான ஃபீல்டிங்கை செட்டிங் செய்து அவரை 141 ரன்களில் அவுட்டாக்க உதவினார்.

- Advertisement -

ரூட்டின் தில்லு:
அதனால் 7 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 7, பென் டூக்கெட் 19 என தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் இருந்து 3வது நாள் முடிவில் 28/2 என தடுமாறியது. அந்த நிலையில் இன்று துவங்கிய 4வது நாளில் கேப்டன் பட் கமின்ஸ் வீசிய முதல் ஓவரின் 4வது பந்திலேயே திடீரென இடது கை பேட்ஸ்மேனாக மாறி விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் ஜோ ரூட் அடிக்க முயற்சித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இத்தனைக்கும் அந்தப் பகுதியில் 3 ஃபீல்டர்கள் நின்றதுடன் 0 ரன்களில் இருந்த அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அப்படி செய்தது ஆச்சரியமாக அமைந்தது என்றே சொல்லலாம். ஆனால் அந்த முயற்சிகளை கைவிடாத அவர் 5வது பந்தில் கொஞ்சமும் பயமின்றி அதே போல விக்கெட் கீப்பருக்கு தலைக்கு மேல் பின் திசையில் நேராக சிக்சரை அடித்து மாஸ் காட்டினார். அத்தோடு நிற்காத அவர் ஸ்காட் போலண்ட் வீசிய அடுத்த சில பந்துகளில் மீண்டும் ஸ்லிப் பகுதிகளில் நின்று கொண்டிருந்த 3 ஃபீல்டர்களுக்கு மேல் அதே போல இடது கை பேட்ஸ்மேனாக மாறி பவுண்டரியை பறக்க விட்டார்.

- Advertisement -

அதை “எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா” என்று இங்கிலாந்து ரசிகர்கள் மைதானங்களில் உற்சாகத்துடன் கொண்டாடினர். இருப்பினும் நவீன கிரிக்கெட்டில் கிளாஸ் நிறைந்த ஜாம்பவான் பேட்ஸ்மேனாக போற்றப்படும் அவர் நியூசிலாந்தின் ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக வந்த பின் கடந்த ஒரு வருடமாகவே இப்படி வித்தியாசமாக அதிரடியாக விளையாடுவதால் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே சொல்லலாம். அப்படி அதிரடியாக துவங்கிய அந்த போட்டியில் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த ஹரி ப்ரூக்கை 46 (52) ரன்களில் அவுட்டாக்கிய நேதன் லயன் சிறிது நேரம் கழித்து ஜோ ரூட்டையும் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 46 (55) ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க:முன்ன மாதிரி இப்போ யாரும் இல்லங்க. நேரடியாக இந்திய அணி வீரர்கள் குறித்து – தமிழக வீரர் அஷ்வின் ஆதங்கம்

அதன் காரணமாக 4வது நாள் உணவு இடைவெளியில் 155/5 ரன்களுடன் விளையாடி வரும் இங்கிலாந்து 162 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் சற்று தடுமாற்றமான நிலையில் இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அணிக்கு களத்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் முனைப்புடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement