வீடியோ : அதே ஷாட், அதே வேகம் – அச்சு அசல் மெல்போர்ன் விராட் கோலியை போலவே சேசிங் செய்து பாகிஸ்தானை சாய்த்த ஜெமிமா

- Advertisement -

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக துவங்கியுள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஹர்மன் ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற அண்டர்-19 மகளிர் டி20 உலக கோப்பையில் ஷபாலி வர்மா தலைமையில் வென்று சரித்திரம் படைத்த உத்வேகத்துடன் இத்தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

அந்த நிலைமையில் பிப்ரவரி 12ஆம் தேதியன்று கேப் டவுன் நகரில் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தன்னுடைய முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்களில் 149/4 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக 68/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு 5வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் காப்பாற்றிய கேப்டன் பீஷ்மா மரூப் 68* (55) ரன்களும் ஆயிஷா நசீம் அதிரடியாக 43* (25) ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 2 விக்கெட் எடுத்தார்.

- Advertisement -

கிங் கோலி போல:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு யாஷ்திகா பாட்டியா 17 (20) ரன்களில் ஆரம்பத்திலேயே தடுமாறி அவுட்டான போது களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகஸ் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் மறுபுறம் அதிரடி காட்டிய இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 33 (25) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 16 (12) ரன்களில் அவுட்டானதால் இந்தியா பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக கடைசி 39 பந்துகளில் வெற்றிக்கு 59 ரன்கள் தேவைப்பட்ட போது ஏற்பட்ட அழுத்தத்திற்கு கொஞ்சமும் வளைந்து கொடுக்காமல் ஜெமிமா பேட்டிங் செய்தார்.

அவருக்கு உறுதுணையாக நின்ற ரிச்சா கோஸ் 18வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து அழுத்தத்தை குறைத்து 31* (20) ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரில் ஜெமிமா ரோட்ரிகஸ் அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 53* (38) ரன்கள் குவித்து 19 ஓவரிலேயே 151/3 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த ஆசிய அணியாக சாதனை படைத்த இந்தியா 2023 டி20 உலக கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

- Advertisement -

முன்னதாக கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 160 ரன்களை துரத்தும் போது 31/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இந்தியாவை வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி 82* ரன்கள் குவித்த விராட் கோலி சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போட்டியில் ஆஃப் சைட் திசையிலும் ஸ்கொயர் லெக் திசையில் விராட் கோலி அடித்த 4 பவுண்டரிகளை போலவே இப்போட்டியில் ஜெமிமாவும் அடித்து பாகிஸ்தானை தோற்கடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்த ஒற்றுமை வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் மெல்போர்னில் கிங் கோலி என்றால் கேப் டவுனில் ஜெமிமா பாகிஸ்தானை தோற்கடித்ததாக மனதாரராக பாராட்டுகிறார்கள். இதில் மற்றுமொரு ஒற்றுமை என்னவெனில் நம்பர் 3 ஜெர்ஸியை கொண்ட இருவருமே ஆட்டநாயகன், நாயகி விருதை வென்றுள்ளார்கள். சொல்லப்போனால் மெல்போர்னில் விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ் தான் தமக்கு இப்போட்டியில் சிறப்பாக விளையாடும் உத்வேகத்தை கொடுத்ததாக போட்டியின் முடிவில் ஜெமிமா பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறயிருந்த மைதானம் திடீர் மாற்றம் – காரணம் இதுதான்

“இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே ஸ்பெஷலானது என்பதை அணி மீட்டிங்கில் பேசுவோம். அந்த போட்டிகளை பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். குறிப்பாக மெல்போர்னில் விராட் கோலி விளையாடிய அபார இன்னிங்ஸ் எனக்கு நினைவில் உள்ளது. அதைப் பற்றி நிறைய பேசியுள்ள நாங்கள் அதே போலயே விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சித்தோம்” என்று கூறினார். இந்த அற்புதமான வெற்றியை விராட் கோலியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதார பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement