இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே மீதமுள்ள மூன்று போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்றாவது போட்டி நடைபெற இருந்த மைதானம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வரும் 17-ம் தேதி துவங்குகிறது.
அதனை தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் எதிர்வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலா மைதானத்திலிருந்து இந்தூர் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தர்மசாலா மைதானத்தின் வெளிப்புற பகுதியின் கட்டமைப்பு நடைபெற்று வருவதால் இன்னும் மைதானம் முழுவதுமாக தயாராகவில்லை என்பதனாலும் மேலும் மோசமான நிலையில் தற்போது அந்த மைதானம் இருப்பதாலும் அந்த போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : IND vs AUS : நீங்க போயி ரஞ்சி போட்டியில ஆடிட்டு வாங்க – இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆடுகள பராமரிப்பாளர் கூறுகையில் : இந்த மைதானம் இன்னும் விளையாடும் அளவிற்கு முழுவதுமாக தயாராகாமல் இருப்பதினால் இந்த போட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.