IND vs SA : சொந்த ஊரில் மிரட்டிய இளம் வீரர் – சாதனைக்கு பின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நெகிழ்ச்சி வீடியோ உள்ளே

- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த நிலையில் சொந்த மண்ணில் இத்தொடரை வெல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய வாழ்வா – சாவா நிலைமையில் அக்டோபர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்காவை 50 ஓவர்களில் 300 ரன்களை எடுக்க விடாமல் 278/7 ரன்களுக்கு மடக்கிப் பிடித்தது. அந்த அணிக்கு டீ காக் 5, ஜானெமன் மாலன் 25 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரீசா ஹென்றிக்ஸ் 74 (76) ரன்களும் ஐடன் மார்க்ரம் 79 (89) ரன்களும் விளாசி அவுட்டானார்கள்.

ஆனாலும் அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் 35* (34) வேன் பர்ணல் 16 (22) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 279 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 13 (20) சுப்மன் கில் 28 (26) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

- Advertisement -

மிரட்டிய இஷான்:
அதனால் 48/2 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்து 35 ஓவர்கள் வரை அட்டகாசமாக பேட்டிங் செய்த ஷ்ரேயஸ் ஐயர் – இஷான் கிசான் ஆகியோர் ஆரம்பத்தில் நங்கூரமாகவும் நேரம் செல்லச்செல்ல அதிரடியாகவும் 3வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். அதில் ஆரம்பம் முதலே சற்று அதிரடியாக விளையாடிய இஷான் கிசான் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 93 (84) ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 15 பவுண்டரியுடன் சதமடித்து 113* (111) ரன்கள் விளாசி வெற்றிபெற வைத்தார். அவருடன் சஞ்சு சாம்சன் 30* (36) ரன்கள் எடுத்ததால் 45.5 ஓவரிலேயே 282/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் அவரைவிட அதிரடியாக விளையாடிய இஷான் கிசான் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

நெகிழ்ச்சி ஆசிர்வாதம்:
முன்னதாக இப்போட்டி நட்சத்திர முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற நிலையில் அதே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஷான் கிசானும் தனது சொந்த ஊரில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கெத்தாக விளையாடி வெற்றி பெற வைத்தார். அதனால் ஆரம்ப முதலே அவருக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பும் ஆதரவும் கொடுத்ததை நேற்றைய போட்டியில் பார்க்க முடிந்தது. அப்படி தமக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு வெற்றியை பரிசளித்த இஷான் கிசான் போட்டி முடிந்ததும் நேரில் சென்று ரசிகர்களோடு ரசிகர்களாக நின்று புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார்.

அதைவிட மைதான பராமரிப்பாளராக இருக்கும் தாயை மதிக்கத்தக்க ஒரு அம்மாவின் அருகே சென்ற அவர் நேரடியாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி மகிழ்ச்சியுடன் பேசி மகிழ்ந்தார். அப்போது “அடுத்தமுறை மைதானத்தில் இருக்கும் பாதுகாப்பு கண்ணாடிகளை சிக்சர் அடித்து நீங்கள் உடைக்க வேண்டும்” என்று அந்த அம்மா கோரிக்கை வைத்தார். அதற்கு நிச்சயமாக அதை செய்வேன் என்று பதிலளித்த இஷான் கிசன் “உங்களது வீட்டுக்கு என்னை எப்போது சாப்பிட கூப்பிடுவார்கள்” என்று பாசத்தை பொழிந்தார்.

அத்துடன் மற்றொரு இந்திய வீரர் ஷர்துல் தாகூரிடம் கொடுக்குமாறு ஒரு ரசிகர் கொடுத்த அன்பு கடிதத்தையும் இஷான் கிசான் பத்திரமாக எடுத்துச் சென்று கொடுத்தார். அதை பார்த்து ஷார்துல் தாகூர் மிகவும் நெகிழ்ச்சியடைந்து போனார். இப்படி நெகிழ்ச்சியாக நடந்த ரசிகர்கள் சந்திப்பிற்கு முன்பாக இப்போட்டியில் 7 சிக்சர்களை பறக்கவிட்ட இஷான் கிசான் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 7 சிக்ஸர்களை விளாசிய 2வது இளம் இந்திய வீரர் (24 வருடம் 83 நாட்கள்) என்ற சாதனையும் படைத்தார். இதற்குமுன் கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் ரிஷப் பண்ட் (13 வருடம் 173 நாட்களில்) 77 (44) ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

Advertisement