வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. குறிப்பாக நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வி சந்தித்ததால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியில் புஜாரா மட்டும் கழற்றி விடப்பட்டு ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கானை தேர்ந்தெடுக்காமல் ஐபிஎல் தொடரில் அசத்திய ருதுராஜ் கைக்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதற்கு நிறைய எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்தன.
அதே போல வருங்காலத்தை கருத்தில் கொண்டு துணை கேப்டனாக இளம் வீரரை நியமிக்காமல் கம்பேக் கொடுத்த ரகானே அறிவிக்கப்பட்டது பல முன்னாள் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அதை விட சமீப காலங்களாகவே கத்துக்குட்டியாக செயல்பட்டு வரும் வெஸ்ட் இண்டீஸ் தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் குவாலிபயர் தொடரில் தோல்வியை சந்தித்து இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலக கோப்பையிலிருந்து வரலாற்றில் முதல் முறையாக வெளியேறியது.
ஜாம்பவானின் சந்திப்பு:
அந்த வகையில் ரொம்பவே கத்துகுட்டியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸை அடித்து சாதனை படைப்பதற்கு பதிலாக முழுவதுமாக இளம் அணியை தேர்வு செய்து ரோகித், விராட் போன்றவர்களை 2023 உலக கோப்பைக்கு தயாராக வகையில் ஓய்வு கொடுத்திருக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ள இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக முதலில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் பார்படாஸ் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய அணியினர் அந்த ஊரில் பிறந்து உலகத்தையே கலக்கிய ஹீரோவான சர் கேர்பீல்ட் சோபர்ஸ் அவர்களை நேரில் சந்தித்து அன்பையும் ஆசியையும் பெற்றனர். 60, 70களில் கொடி கட்டி பறந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் 8032 ரன்களையும் 235 விக்கெட்களையும் எடுத்து வரலாற்றின் முதல் மகத்தான ஆல் ரவுண்டராக செயல்பட்ட பெருமைக்குரியவர்.
அத்துடன் உலகிலேயே ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த ஜாம்பவானான அவரது பெயரில் தான் ஒவ்வொரு வருடமும் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அசத்தும் “வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்” என்ற விருதை ஐசிசி கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அவர் தற்போது 84 வயதாகும் நிலையில் தன்னுடைய மனைவியுடன் இந்திய அணியினரை சந்தித்தார். அவர்களை முதலாவதாக கேப்டன் ரோகித் சர்மா சந்தித்து கை கொடுத்து நலம் விசாரித்தார். அதைத்தொடர்ந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒவ்வொரு இந்திய வீரராக அவரிடம் அறிமுகப்படுத்தி பேச வைத்தார்.
குறிப்பாக எங்களுடைய வருங்கால நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் என்று சுப்மன் கில்லை ராகுல் டிராவிட் அறிமுகப்படுத்திய போது மிகுந்த வியப்புடன் சோபர்ஸ் கைகொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்கள் அனைவரையும் விட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியிடம் அறிமுகம் எதுவும் தேவையில்லாமலேயே கை கொடுத்த சோபர்ஸ் மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் அதிக நேரம் பேசி தோளில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானாக அவருடன் விராட் கோலியும் சிரித்த முகத்துடன் பேசி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
இதையும் படிங்க:சேட்டன் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் இவர் தானா – பிசிசிஐ வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ
மேலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்படி இருக்கீங்க என்று கேட்டு நலம் விசாரித்த நிலையில் இறுதியாக ராகுல் டிராவிட் உடம்பை பார்த்துக்கோங்க என்று தம்முடைய ரோல் மாடல்களில் ஒருவரான சோபர்ஸை வாழ்த்தினார். அவரை போன்ற ஜாம்பவானை அதுவும் மனைவியுடன் சந்திப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்காது என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த வாய்ப்பை பெற்ற இந்திய அணியினர் அடுத்ததாக ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.