சேட்டன் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் இவர் தானா – பிசிசிஐ வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

Chetan Sharma
- Advertisement -

சர்வதேச அளவில் முதன்மை அணியாக இருந்து வரும் இந்தியாவுக்கு சமீபத்திய வருடங்களாகவே சரியான தேர்வுக்குழு தலைவர் நியமிக்கப்படாததும் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்திப்பதற்கு மறைமுக காரணமாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் ஐபிஎல் தொடரால் கோடிகளை சம்பாதித்து உலகின் நம்பர் ஒன் வாரியமாக இருக்கும் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வர்னணையாளராக செயல்படுவதற்கு கிடைக்கும் தொகையை விட குறைந்த சம்பளத்தை கொடுப்பதாலேயே விரேந்தர் சேவாக் போன்ற முன்னால் வீரர்கள் விண்ணப்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதன் காரணமாகவே ஓரிரு உள்ளூர் போட்டிகளில் விளையாடி ரசிகர்களுக்கு யாரென்றே குறைந்த அனுபவத்தை கொண்ட முன்னாள் வீரர்கள் இந்த பதவியில் சமீப காலங்களில் இருந்து வந்தனர். அதில் குறிப்பாக எம்எஸ்கே பிரசாத் அந்த பதவியிலிருந்த போது தகுதியான ராயுடுவை தேர்ந்தெடுக்காமல் வன்மத்துடன் அவருடைய கேரியரை முடித்தது மட்டுமல்லாமல் 2019 உலகக்கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கும் மறைமுக காரணமாக அமைந்தார்.

- Advertisement -

புதிய தலைவர்:
அவரைத் தொடர்ந்து பொறுப்பேற்ற சேட்டன் சர்மாவும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கேஎல் ராகுல் போன்ற சுமாராக செயல்படும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்திருந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் சிக்கி சர்ச்சைக்குரிய முறையில் ராஜினாமா செய்தார். அந்த நிலையில் எஸ்எஸ் தாஸ் தலைமையில் தற்காலிகமாக செயல்பட்ட தேர்வுக்குழு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான அணியை தேர்வு செய்திருந்தது.

இந்நிலையில் இந்திய சீனியர் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக விமர்சனங்களை தொடர்ந்து சம்பளத்தை பிசிசிஐ உயர்த்தியதால் டெல்லி ஐபிஎல் அணியில் வகித்த துணைப் பயிற்சியாளர் பதவியை விட்டுவிட்டு இந்த பதவிக்கு அகர்கர் விண்ணப்பித்திருக்கிறதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

- Advertisement -

அதை தொடர்ந்து அந்த பதவிக்கு விண்ணப்பித்த மற்றவர்களை காட்டிலும் அதிக அனுபவத்தை கொண்டிருப்பதால் அவரை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள பிசிசிஐ இது பற்றி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “சுலக்சனா நாயக், அசோக் மல்கோத்ரா மற்றும் ஜெட்டின் பரஞ்சபி ஆகிய கிரிக்கெட் ஆலோசக குழுவினர் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவருக்கு பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்தது. அதில் மிஸ்டர் அகர்கர் அந்த பதவிக்கு தகுதியுடையவராக அவர்கள் பரிந்துரை செய்தனர்”

“மும்பை அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த அவர் டெல்லி அணியில் துணை பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். அதனால் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அவரை ஆலோசனை குழு பரிந்துரைத்ததை ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அஜித் அகர்கர் 26 டெஸ்ட் மற்றும் 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 346 விக்கெட்களை எடுத்த நல்ல அனுபவத்தை கொண்டுள்ளார்.

- Advertisement -

மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற வியக்க வைக்கும் சாதனையை இன்றும் தன்வசம் வைத்துள்ள அவர் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களால் கூட எட்ட முடியாத டெஸ்ட் சதத்தை பதிவு செய்த பெருமை கொண்டவர். மேலும் 2007 டி20 உலக கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

Ajit-Agarkar

இதையும் படிங்க:ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டின் இடத்தை நிரப்ப தகுதியானவர் இவர்தான் – தினேஷ் கார்த்திக் கருத்து

அதே சமயம் மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் “பாம்பே டக்” பரிதாப சாதனையைப் போல ஒருதலைப் பட்சமாக தேர்வு செய்யாமல் லார்ட்ஸ் சதத்தைப் போல இந்தியாவின் நலனுக்காக நியாயத்துடன் வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலிருந்து தரமான அணியை தேர்வு செய்யுமாறு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

Advertisement