ஸ்மித்தை தெறிக்க விட்ட பாண்டியா அசத்தல் சாதனை, சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய குல்தீப் – இந்தியாவுக்கு கடினமான இலக்கு

IND vs AUS ODi
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் போராடி வென்ற நிலையில் 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 1 – 1* (3) என சமனைடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 22ஆம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.

அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியை ஹர்டிக் பாண்டியா பிரித்தார். குறிப்பாக 11வது ஓவரின் 5வது பந்தை கட் ஷாட் அடிக்க முயற்சித்த டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (31) ரன்களில் தேர்ட் மேன் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி செல்ல அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் கொடுத்து டக் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

முன்னதாக கடந்த போட்டியிலும் அவர் இதே போல பாண்டியாவிடம் எட்ஜ் கொடுத்து அவுட்டானார். அப்படி மகத்தான வீரராக கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை அடுத்தடுத்த போட்டிகளில் காலி செய்த ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை அதிக முறை அவுட்டாக்கிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்டிக் பாண்டியா : 5*
2. உமேஷ் யாதவ், ட்ரெண்ட் போல்ட், முகமது ஷமி, ஸ்டூவர்ட் ப்ராட், மார்க் வுட் : தலா 3

அத்துடன் நிற்காமல் மறுபுறம் 8 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 47 (47) ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த மிச்சல் மார்ஷையும் அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அதனால் 85/3 என்ற சரிந்த ஆஸ்திரேலியாவை வழக்கத்துக்கு மாறாக மிடில் ஆர்டரில் களமிறங்கி மீட்டெடுக்க முயற்சித்த டேவிட் வார்னரை 23 (31) ரன்களில் தனது தரமான சுழல் பந்து வீச்சில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் அடுத்த சில ஓவரிலேயே மார்னஸ் லபுஸ்ஷேனையும் 28 (45) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அதனால் மீண்டும் சரிந்த ஆஸ்திரேலியாவை மிடில் ஆர்டரில் நங்கூரமாக செயல்பட்டு 6வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவுக்கு காப்பாற்றிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 (26) ரன்களில் அக்சர் படேலிடம் வீழ்ந்தார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் நன்கு செட்டிலாகி அதிரடியை துவக்க முயற்சித்த அலெக்ஸ் கேரியை 38 (46) ரன்களில் குல்தீப் யாதவ் தனது மாயாஜால சூழலால் க்ளீன் போல்ட்டாக்கி ரசிகர்களையும் வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இறுதியில் சீன் அபோட் 26 (23) அஸ்டன் அகர் (23) மிட்சேல் ஸ்டார்க் 10, அடம் ஜாம்பா 10 என டெயில் எண்டர்கள் கணிசமான ரன்களை எடுத்த போதிலும் 49 ஓவரில் ஆஸ்திரேலியாவை 269 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளும் முகமது சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

இப்போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் பிட்ச் முதலில் இன்னிங்ஸில் பேட்டிங்க்கு சாதகமாகவும் நேரம் செல்ல செல்ல பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்து வருவதை சரியாக கணித்த ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெற்றிக்கு போராடும் அளவுக்கு மிகச்சிறந்த ஸ்கோரை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: டாஸ் போட்ட அப்றம் ப்ளேயிங் லெவல் செலக்ட் பண்ணலாம் – ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகமாகும் 4 புதிய ரூல்ஸ் இதோ

மறுபுறம் பந்து வீச்சில் கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட இந்தியாவுக்கு சென்னை பிட்ச்சில் சேசிங் செய்யும் கடினமான வேலை காத்திருக்கிறது. அதில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை விடாமல் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் பேட்டிங் செய்தால் மட்டுமே வெற்றியை பதிவு செய்து இத்தொடரை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்தியா தலை நிமிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement