- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வீடியோ: என்னா பேட்ஸ்மேன் எப்பா, ஆஸ்திரேலியாவில் சூர்யகுமாரை விளையாட வைக்க எங்களிடம் காசு இல்ல – கிளன் மேக்ஸ்வேல் வியப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து பயணித்து பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இளம் இந்திய அணி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2024 டி20 கோப்பைக்கான பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் நிறைய இளம் வீரர்கள் அசத்தலாக செயல்பட்டாலும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் தான் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார் என்று வெளிப்படையாக சொல்லலாம்.

ஏனெனில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 3வது போட்டி மழையால் சமனில் முடிந்த நிலையில் 2வது போட்டியில் இதர இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாடிய போது சவாலை கொடுத்த அதே நியூசிலாந்து பவுலர்களை தமக்கே உரித்தான பாணியில் அடித்து நொறுக்கிய அவர் 11 பவுண்டர் 7 சிக்ஸருடன் சதமடித்து 111* (51) ரன்களை விளாசி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அந்த வெற்றியே இறுதியில் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்ததால் தொடர் நாயகன் விருதை வென்ற அவர் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

வியந்த மேக்ஸ்வெல்:
கடந்த வருடம் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் இளம் காளையாக சீறிப்பாயும் சூரியகுமார் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கி பெரிய ரன்களைக் குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார். அதைவிட சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தின் 8 திசைகளிலும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிடும் அவரது பேட்டிங்கை பார்த்து வியக்கும் ரசிகர்களும் முன்னாள் ஜாம்பவான்களும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடுகிறார்கள்.

அந்த வரிசையில் இணைந்துள்ள ஆஸ்திரேலியாவின் அதிரடி நாயகன் கிளன் மேக்ஸ்வெல் யாருமே நினைத்து பார்க்க முடியாத ஷாட்டுகளை அடித்து விளையாடும் சூரியகுமாரை யாருமே நெருங்க முடியாது என்று வியந்து பாராட்டியுள்ளார். குறிப்பாக 2வது போட்டியில் அவர் சதமடித்த ஸ்கோரை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்க்கு அனுப்பியதாக தெரிவிக்கும் கிளன் மேக்ஸ்வெல் வேற்று கிரகத்திலிருந்து வந்த அடிப்பது போல் பேட்டிங்கில் மிரட்டுவதாக பாராட்டினார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த போட்டியை பற்றி நான் அறியவில்லை. ஆனால் பின்னர் அப்போட்டியின் ஸ்கோர் கார்டை பார்த்த நான் உடனடியாக அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பின்ச்சுக்கு அனுப்பி “இங்கே என்ன நடக்கிறது? அவர் வேறு ஏதோ கிரகத்திலிருந்து விளையாடுவதைப் போல் முற்றிலும் வித்தியாசமாக பேட்டிங் செய்கிறார்” என்று சொன்னேன். அப்போட்டியில் இதர இந்திய வீரர்களின் ஸ்கோரை பாருங்கள் அவரது ஸ்கோரை பாருங்கள். அவர் மட்டும் 50 பந்துகளில் 111 ரன்கள் குவித்துள்ளார். அதன் காரணமாக ஆர்வமடைந்த நான் அடுத்த நாள் அவருடைய பேட்டிங்கை முழுமையாக உட்கார்ந்து பார்த்தேன்”

“அவர் மற்றவர்களை விட சிறப்பாக விளையாடியுள்ளார். சொல்லப்போனால் அதை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் ஒரு பேட்ஸ்மேனாக அவரை யாருமே நெருங்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன்” என்று கூறினார். அப்படிப்பட்ட சூரியகுமார் பிக்பேஷ் கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் விலை மதிப்பற்ற வீரராக திகழும் அவரை ஆஸ்திரேலியாவில் விளையாட வைக்கும் அளவுக்கு தங்கள் நாட்டு அணிகளிடம் பணமில்லை என்று கலகலப்பாக பாராட்டினார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

“நம்மிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதால் அதற்கு வாய்ப்புமில்லை. அவர் விளையாட வேண்டுமெனில் முதலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இருக்கும் வீரர்களை நாம் அதிரடியாக நீக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக உலக கோப்பைக்குப் பின் காயத்தை சந்தித்த மேக்ஸ்வெல் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -