வரலாற்றில் இப்படி ஒரு ஷாட்டை பார்த்ததே இல்ல – கில்கிறிஸ்ட் முதல் கம்பீர் வரை வியக்கும் வெ.இ வீரரின் மெகா சிக்சர், வீடியோ உள்ளே

Kyle Mayers Six
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்க தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இந்திய மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் டி20 தொடரில் தோல்வியடைந்த அந்த அணி உலகக் கோப்பைக்கு முன் கடைசியாக சொந்த மண்ணில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ளது.

மெட்டிகோரின் மைதானத்தில் அக்டோபர் 5ஆம் தேதியன்று துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் போராடி 145/9 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு சார்லஸ் 3, கிங் 12, ரைஃபர் 19, கேப்டன் பூரான் 2, போவல் 7, ஜேசன் ஹோல்டர் 13 என முக்கிய வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 39 (36) ரன்களும் ஓடென் ஸ்மித் 27 (17) ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சொதப்பிய விண்டீஸ்:
அதை தொடர்ந்து 146 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 14, கேமரூன் க்ரீன் 14, மிட்சேல் மார்ஷ் 3, கிளென் மேக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீசின் திறமையான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதனால் ஆரம்ப முதலே தடுமாறிய அந்த அணிக்கு 4வது இடத்தில் களமிறங்கி நங்கூரத்தை போட்ட கேப்டன் ஆரோன் பின்ச் 6 பவுண்டரியுடன் நிதானமாக 58 (53) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது வெற்றியை கையில் வைத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி ஓவரில் 11 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் கோட்டை விட்டது என்றே கூறலாம். ஏனெனில் செல்டன் காட்ரல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி பறக்கவிட்ட மேத்யூ வேட் 2வது பந்தில் கொடுத்த எளிமையான கேட்ச்சை ரேமன் ரைஃபர் கோட்டைவிட 4வது பந்தில் மிட்சேல் ஸ்டார்க் கொடுத்த கேட்ச்சை கெய்ல் மேயர்ஸ் கோட்டை விட்டார். அதனால் மேத்தியூ வேட் 5 பவுண்டரியுடன் 39* (29) ரன்களும் மிட்செல் ஸ்டார்க் 6* (4) ரன்களும் எடுத்து 19.5 ஓவரில் ஆஸ்திரேலியாவை 146/7 ரன்களை எடுக்க வைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர்.

- Advertisement -

வாட்ட ஷாட்:
அதனால் 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் இத்தொடரின் 2வது போட்டி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 39 (36) ரன்களை அடித்த கெய்ல் மேயர்ஸ் பறக்கவிட்ட ஒற்றை சிக்ஸர் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் ஜோஸ் ஹேசல்வுட் வீசிய 4வது ஓவரில் பவுன்ஸாகி வந்த 3வது பந்தை லாவகமாக முன்னங்காலை லேசாக இடது புறம் நகர்த்தி பின்னங்காலில் நின்று வலுவான பன்ச் மட்டுமே கொடுத்த மேயர்ஸ் மெகா சிக்சரை பறக்கவிட்டார்.

அதை பார்த்த மைக்கேல் ஸ்லேட்டர் உள்ளிட்ட வர்ணனையாளர்கள் அப்படியே வியந்து போய் “இது ஒரு நம்பமுடியாத அபாரமான ஷாட்” என வர்ணிக்க முடியாமல் புகழ்ந்து தள்ளினார்கள். அதைவிட 135 கி.மீ என்ற நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்ததால் பேட்டில் இழுத்தடிக்கப்பட்ட அந்த பந்து அசால்டாக 105 மீட்டர் தூரம் பயணித்து மைதானத்தின் 2வது மாடிக்கு சென்று ரசிகர்களின் இருக்கையில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது.

உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு பார்க்கும்போதே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் இந்த ஷாட்டை பார்த்து வியந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் வரலாற்றில் இதை விட மிகச் சிறந்த ஷாட் எனது நினைவில் இல்லை என்று மனதார பாராட்டினார். அதேபோல் இதுபோல் அடிப்பதற்கு உங்களுக்கு அனுமதியில்லை என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன் ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னாள் வீரர்களும் ஏராளமான ரசிகர்களும் இந்த சிக்ஸரை பார்த்து வியந்து போய் மேயர்ஸை பாராட்டுகின்றனர்.

Advertisement