வீடியோ : நடு வானத்தில் ஒலித்த ரசிகர்களின் சச்சின் சச்சின் குரல் – அவருடைய அன்பு ரியாக்சன் இதோ

Sachin Fans
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் வரலாறு கண்ட மிகச்சிறந்த வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். மும்பை சேர்ந்த இவர் 16 வயது பிஞ்சுக் கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களிலேயே வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொண்டு வளர்ந்தார். அதனாலயே நல்ல தரத்தை பெற்ற அவர் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் ஒரு சில வருடங்களுக்குப் பின் உலகின் அத்தனை தரமான பந்து வீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக நின்று இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்தார்.

குறிப்பாக 90களில் இவர் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலைமையால் கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களும் கிரிக்கெட் என்றாலே சச்சின் டெண்டுல்கர் என்று நினைத்தார்கள். அதனாலயே அவர் அவுட்டானதும் இந்தியாவில் ஆஃப் செய்யப்பட்ட தொலைக்காட்சிகளும் ஏராளமாக இருந்தது. இருப்பினும் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து 24 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையை தன் தோள் மீது சுமந்தார்.

- Advertisement -

வானத்தில் ஒலித்த குரல்:
மேலும் ஒரு சில சதங்கள் அடிப்பதற்கே திண்டாடும் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் தவறான தீர்ப்புகளால் நிறைய முறை 90களில் அவுட்டானதையும் கடந்து 100 சதங்களை அடித்தது, ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை முதல் வீரராக கடந்தது, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக ஆட்ட நாயகன் விருதுகள் வென்றது உட்பட அவர் படைக்காத சாதனைகளும் இல்லை. அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக கருதப்பட்ட இரட்டை சதத்தை எப்படி அடிக்க வேண்டும் என்ற கலையை இந்த உலகிற்கு கற்றுக் கொடுத்த அவரை கிரிக்கெட்டின் கடவுள் என்று இந்திய ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

மேலும் அவர் விளையாடும் போதெல்லாம் “சச்சின் சச்சின்” என்று ஒலித்த குரல் 2013இல் ஓய்வு பெற்ற பின்பும் தற்போதும் ஒலித்து வருகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை மைதானத்தில் தோனி விளையாடினாலும் சாதாரணமாக அவரது முகத்தை பெரிய திரையில் பார்த்தாலே “சச்சின் சச்சின்” என்று ரசிகர்கள் குரல் எழுப்புவதே அவருடைய சாதனைகளின் உச்சகட்டமாகும். அந்த வகையில் இப்போதும் மவுசு குறையாமல் பலருக்கும் ரோல் மாடலாக ஜொலித்து வரும் சச்சின் டெண்டுல்கர் கடந்த சனிக்கிழமை அன்று ஏதோ ஒரு நகருக்கு விமானத்தின் வாயிலாக பயணித்துள்ளார்.

- Advertisement -

அங்கு வழக்கம் போல அவரே அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். அதிலும் குறிப்பாக வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது சச்சின் சச்சின் என்று முழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதை ஒரு ரசிகர் வீடியோவாக எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இது இப்போது தான் நான் பயணிக்கும் விமானத்தில் நடந்தது. களத்திலும் களத்திற்கு வெளியேயும் சச்சின் சச்சின் என்ற குரல் நமது இதயங்களில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

அதை பார்த்த இதர ரசிகர்கள் உடனடியாக மகிழ்ச்சியடைந்து அதிகமாக ஷேர் செய்ததால் அந்த வீடியோ ட்ரெண்டிங் ஆனது. அதைப் பார்த்த சச்சின் அந்த அன்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் துரதிஷ்டவசமாக சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ரசிகர்களுக்கு அந்த சமயத்தில் நன்றி தெரிவிக்க முடியவில்லை என்றும் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “சமீபத்தில் விமானத்தில் என்னுடைய பெயரை ஒலித்த அனைவருக்கும் எனது மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”

இதையும் படிங்க: ஆட்டமிழந்து வெளியேறிய பாக் பேட்ஸ்மேனை கைகுலுக்கி வழியனுப்பிய இங்கிலாந்து வீரர்கள் – நெகிழ்ச்சியான தருணம்

“இந்த தருணம் நான் பேட்டிங் செய்ய வெளியே வந்ததை நினைவூட்டுகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக சீட் பெல்ட் அணிந்திருந்ததால் உங்களை வரவேற்க என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. எனவே இப்போது உங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். எப்போதுமே ரசிகர்களை மதித்து பாசத்தை வெளிப்படுத்தும் சச்சின் விமானத்தில் தவறவிட்டாலும் ட்வீட்டர் வாயிலாக பதிலுக்கு பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Advertisement