சிக்ஸரால் தொலைந்த பந்து, உள்ளே புகுந்து நீண்ட நேரம் தேடி கண்டுபிடித்த ரசிகர் – பாராட்டிய சாஸ்திரி, சிரித்த கில்

Fan Ball Search
- Advertisement -

உலகின் டாப் 2 கிரிக்கெட் அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதி வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தகுதி பெற்றது. அதனால் பின்னடைவை சந்தித்த இந்தியா மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது.

இருப்பினும் அப்போட்டியில் பிளாட்டாக இருக்கும் பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட்32 மார்னஸ் லபுஸ்ஷேன் 3, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 38, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இந்தியா போராடியது. இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சவாலை கொடுத்த உஸ்மான் கவஜா அதிகபட்சமாக சதமடித்து 180 ரன்களும் கேமரூன் கிரீன் சதமடித்து 114 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பாசக்கார ரசிகர்:
இறுதியில் 8வது விக்கெட்டுக்கு 72 பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த டெயில் எண்டர்கள் நேதன் லயனை 34 ரன்களிலும் டோட் முர்பியை 41 ரன்களிலும் அவுட்டாக்கிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 6 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ரோஹித் சர்மா 17* ரன்களும் சுப்மன் கில் 18* ரன்களும் எடுத்ததால் 2வது நாள் முடிவில் 36/0 ரன்களுடன் விளையாடி வருகிறது. அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற 2வது நாளில் நேதன் வீசிய கடைசி ஓவரின் ஒரு பந்தை அதிரடியாக அடித்த சுப்மன் கில் லாங் ஆன் திசையில் பெரிய சிக்சரை பறக்க விட்டார்.

கிட்டத்தட்ட நேராக சென்ற அந்த பந்து அங்கே வைக்கப்பட்டிருந்த சைட் ஸ்கிரீன் பகுதியில் இருந்த வெள்ளை துணிகளுக்கு உள்ளே சென்று விழுந்தது. பொதுவாக ரசிகர்கள் கூட்டத்தில் பந்து விழும் போது அதை பிடித்து கொண்டாட்டத்துடன் மீண்டும் ரசிகர்கள் களத்திற்குள் தூக்கி எறிவார்கள். ஆனால் அந்தப் பந்து சைட் ஸ்கிரீன் பகுதியில் இருந்த வெள்ளை துணிகளுக்குள் சென்று விழுந்ததால் பெரும்பாலான ரசிகர்களால் அதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஓரிரு நிமிடங்கள் காத்திருந்த நடுவர்கள் புதிய பந்தை கொண்டு வருமாறு 3வது நடுவருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

- Advertisement -

ஆனால் அந்த சமயத்தில் பந்து விழுந்ததை கவனித்த ஒரு ரசிகர் விழுந்த இடத்தில் வேகமாக சென்று தேடினார். இருப்பினும் முதல் முயற்சியில் அவருக்கு பந்து கிடைக்காததால் அதே நேரத்தில் பந்து பெட்டியுடன் களத்திற்குள் வந்த 3வது நடுவரிடமிருந்து களத்தில் இருந்த நடுவர்கள் ஒரு பந்தை தேர்வு செய்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடம் கொடுத்தார்கள். ஆனால் அப்போது பந்து இருக்கும் இடம் தெரிந்து விட்டதாக அதை தேடிய ரசிகர் தன்னுடைய 2 கைகளையும் உயர்த்தி நடுவருக்கு சிக்னல் கொடுத்தார். அப்படியானால் சீக்கிரம் எடுத்துக் கொடுங்கள் என்று நடுவர் அதற்கு பதில் சிக்னல் கொடுத்தார்.

ஆனாலும் அதற்கு தாமதமானதால் பேசாமல் வந்து விடுங்கள் வேறு பந்தில் விளையாடலாம் என்று நடுவர் அந்த ரசிகருக்கு மீண்டும் சிக்னல் கொடுத்தார். இருப்பினும் அந்த சமயத்தில் வெள்ளை துணிகளுக்குள் முழுவதுமாக உள்ளே சென்று பந்தை தேடி கண்டுபிடித்த அந்த ரசிகர் பந்துடன் கைகளை அசைத்தது அனைத்து ரசிகர்களையும் ஆரவாரப் படுத்தியது. குறிப்பாக பந்தை தேடி எடுத்து விட்டேன் என்ற அளவு கடந்த மகிழ்ச்சியுடன் சைட் ஸ்க்ரீன் துணிகளுக்கு மேல் பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறிய அவர் சற்று உடல் பருமனாக இருந்ததால் பந்தை மைதானத்திற்குள் தூக்கி எறிந்த போது பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுந்தார்.

இதையும் படிங்க: IND vs AUS : மாரத்தான் இன்னிங்ஸ் விளையாடிய கவாஜா, இந்தியாவை சிதைத்து 43 வருட பிரம்மிக்க வைக்கும் புதிய சாதனை

அப்போது அதை தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்த ரவி சாஸ்திரி “அவர் தங்கத்தை கண்டுபிடித்து விட்டார். பந்தை எறியும் போது பேலன்ஸ் இழந்து விட்டார்” என்று கலகலப்புடன் பாராட்டினார். இறுதியில் களத்திற்குள் பந்து வந்ததை பார்த்து அதை அடித்த சுப்மன் கில் புன்னகைத்த நிலையில் இந்தியாவுக்காக மெனக்கெட்டு தேடிய அந்த ரசிகர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

Advertisement