வீடியோ : எரிமலையாக வெடித்த குட்டி ஏபிடி கெயிலை முந்தி உலக சாதனை, பீல்டிங்கில் மிரட்டல் – பாராட்டிய ஏபிடி

Dewald Brevis
- Advertisement -

வளர்ந்து வரும் நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதில் அற்புதமாக செயல்படுவதற்காக நிறைய வீரர்கள் புதுப்புது டெக்னிக்கை கற்று வருகிறார்கள். குறிப்பாக பேட்டிங் துறையில் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் திரும்பி, உருண்டு, பிரண்டு பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் நாலாபுறமும் பவுண்டரிகளை பறக்க விட்டு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார். அதனால் தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அவரைப் போல வரவேண்டும் என்பதே விருப்பமாக கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தென்னாபிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் அவரை தனது ரோல் மாடலாக வைத்து அவரைப் போலவே அதிரடியாக விளையாடி ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்திய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதில் ஒரு சில போட்டிகளில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவரை ஏற்கனவே “பேபி ஏபி” என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெறும் சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் உள்ளூர் தொடரில் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் அக்டோபர் 31ஆம் தேதியன்று நடைபெற்ற நைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எரிமலையாக வெடித்து சதமடித்தார்.

- Advertisement -

எரிமலை ப்ரேவிஸ்:
போட்ச்பெஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டைட்டன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி எதிரணி பவுலர்களை பிரித்து மேய்ந்த அவர் 13 பவுண்டரி 13 மெகா சிக்சர்களுடன் சதமடித்து 162 (57) ரன்களை 284.21 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார். அவரது அதிரடியால் 20 ஓவர்களில் 271/3 ரன்கள் குவித்த டைட்டன்ஸ் பின்னர் 41 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

முன்னதாக இப்போட்டியில் 162 ரன்களை தெறிக்க விட்ட அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. தேவாலட் ப்ரேவிஸ் : 162, நைட்ஸ்க்கு எதிராக, 2022*
2. குயின் டீ காக் : 140*, கொல்கத்தாவுக்கு எதிராக, 2022
3. பீட்டர் மாலன் : 140*, ஈஸ்டர்ன்ஸ் அணிக்கு எதிராக, 2014
4. ஏபிடி வில்லியர்ஸ் : 133*, மும்பைக்கு எதிராக, 2015

- Advertisement -

அதைவிட வெறும் 52 பந்துகளில் 150 ரன்களை கடந்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 150 ரன்கள் குவித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் யாராலும் மறக்க முடியாத 175* ரன்கள் குவித்த போது கிறிஸ் கெயில் 53 பந்துகளில் 150 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

அத்துடன் 272 ரன்களை துரத்திய நைட்ஸ் அணி 72/0 என்ற வலுவான தொடக்கத்தை பெற்றபோது அந்த அணியின் சினிமேன் 28 (13) ரன்களில் ஒரு மெகா சிக்சரை பறக்க விட்டார். அதை பவுண்டரி எல்லை அருகே நின்ற தேவால்ட் ப்ரேவிஸ் ஏபி டீ வில்லியர்ஸ் போலவே தாவி பிடித்தார்.

- Advertisement -

இருப்பினும் பௌண்டரி எல்லையை கடந்த போது பேலன்ஸ் செய்ய முடியாது என்பதை உணர்ந்த அவர் பந்தை மைதானத்திற்கு உள்ளே தூக்கி போட்டு பின்னர் சூப்பர்மேன் போல மீண்டும் தாவி பிடித்து கேட்ச்சை உறுதி செய்தார். அதை ரிப்ளையில் பார்த்த போது அரை நொடி பொழுதில் அவர் துல்லியமாக செயல்பட்டது தெரிய வந்ததால் ஒன்றுக்கு 2 முறை சோதித்த 3வது நடுவர் பேசுவதற்கு வார்த்தைகள் இன்றி அவுட் கொடுத்தார்.

அதை பார்த்து வியந்த வர்ணனையாளர்கள் இது கற்பனைக்கு மிஞ்சியது என்று மனதார பாராட்டினார்கள். இதைப் பார்த்த ஏபி டிவில்லியர்ஸ் “தேவால்டு ப்ரேவிஸ், இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை” என்று ட்விட் போட்டு மனதார பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs BAN : பங்களாதேஷ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு – 17 பேர் கொண்ட முழுலிஸ்ட் இதோ

அவரை போலவே ஒரே போட்டியில் எரிமலையாகவும் சூப்பர்மேனாகவும் செயல்பட்ட தேவாலட் ப்ரேவிஸை அனைத்து ரசிகர்களும் வியந்து பாராட்டுகிறார்கள். அதனால் மும்பை ரசிகர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் வருங்காலத்தில் தென்னாப்பிரிக்காவுக்கும் உலக கிரிக்கெட்டுக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் கிடைத்து விட்டார் என்றே கூறலாம்.

Advertisement