அபாரமான பீல்டிங், விழுந்த வீராங்கனை – காமன்வெல்த் பைனலில் இந்தியாவின் செயல்பாட்டை விளக்கும் 4 வீடியோ இதோ

Womens Cricket
- Advertisement -

வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் லீக் சுற்றில் அசத்தி நாக்-அவுட் சுற்றில் வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா ஆகஸ்ட் 7-ஆம் தேதியான நேற்று பர்மிங்காமில் நடந்த மாபெரும் இறுதி போட்டியில் 5 உலக கோப்பைகளை வென்ற டி20 உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக பெத் மூனி 61 (41) ரன்களும் கேப்டன் மெக் லென்னிங் 36 (26) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரேணுகா சிங் மற்றும் ஸ்னே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 162 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஸ்மிருதி மந்தனா 6 (7) ஷபாலி வர்மா 11 (7) என முக்கிய வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 22/2 என்ற படுமோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு சிங்கப்பெண்ணாக களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீட் கௌர் – ஜெமிமா ரோட்ரிகஸ் உடன் இணைத்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

செயல்பாடுகளின் 4 தருணங்கள்:
அப்போது ஜெமிமா ரோட்ரிகஸ் 33 (33) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த பூஜா 1 ரன்னில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 65 (43) ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடிய ஹர்மன்பிரீட் அவுட்டானார். ஆனால் அடுத்து வந்த வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவிடம் அடிபணிந்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் ஒரு கட்டத்தில் 118/2 என்ற நிலையில் இருந்த இந்தியா 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அதனால் வெள்ளியை ஆறுதலாக வென்றாலும் 2017, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் எப்படி இந்தியா தோற்றதோ அதிலிருந்து கொஞ்சமும் முன்னேறாமல் மீண்டும் அதே போல் சொதப்பி கையிலிருந்த வெற்றியை தாரை வார்த்தது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலைமையில் இப்போட்டியில் 70% இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில் கடைசி நேரத்தில் தடுமாறி வெற்றியை கோட்டை விட்டதை 4 தருணங்களை வைத்து எளிதாக புரிந்துகொள்ளலாம். அதைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. அற்புத ரன்-அவுட்: இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு அலிசா ஹீலி 7 ரன்களில் அவுட்டானதும் அடுத்த ஜோடி சேர்ந்த கேப்டன் லென்னிங் – பெத் மூனி ஆகியோர் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை வலுப்படுத்தினர். அப்போது 11வது ஓவரை வீசிய ராதா யாதவின் 2-வது பந்தை எதிர்கொண்ட மூனி அவரிடமே அடித்தார்.

அதனால் எதிர்ப்புறம் இருந்த லென்னிங் சிங்கிள் எடுக்கலாம் என்று அவசரப்பட்டு கிரீஸை விட்டு வெளியே வந்த சமயத்தில் பந்தை கச்சிதமாக பிடித்த ராதா யாதவ் பின்னோக்கி திரும்பாமல் தனது காலுக்கிடையே குனிந்தவாறு ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். அது சரியாக ஸ்டம்பில் பட்டதால் அம்பயரிடம் அவுட் கேட்கப்பட்டது. அதை சோதித்துப் பார்த்ததில் ஒரு நொடியில் ஒரு இன்ச் இடைவெளியில் அவுட்டான லென்னிங் ராதா யாதவின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டு பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

2. மீண்டும் ராதா: அப்போது அடுத்ததாக களமிறங்கிய தஹிளா மெக்ராத் தீப்தி சர்மா வீசிய அடுத்த ஓவரில் கட்-ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் முந்தைய ஓவரில் அற்புதமாக ரன் அவுட் செய்த ராதா யாதவ் இம்முறை தம்மிடம் வந்த பந்தை சூப்பர் உமனை போல் அழகாக தாவி பிடித்து அபாரமான பீல்டிங் செய்தார்.

அதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப்போய் கைதட்டி பாராட்டிய நிலையில் அதன் காரணமாக மெக்ராத் வெறும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

3. தீப்தியின் சாகசம்: இருப்பினும் இப்போட்டியில் மறுபுறம் 61 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பெத் மூனி ஸ்னே ராணா வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார்.

ஆனால் அது கேட்ச்சாக மாறிய நிலையில் பவுண்டரி எல்லையின் அருகில் இருந்த தீப்தி சர்மா பந்தை பார்த்துக் கொண்டே பின்னோக்கி சில அடிகள் நகர்ந்து ஒற்றைக் கையால் தாவிப் பிடித்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

4. விழுந்த பாட்டியா: இப்படி அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 162 ரன்களை துரத்தும் போது கடைசியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் ஏற்பட்ட பரபரப்பில் 150/8 என்ற நிலைமையில் களமிறங்கிய யஸ்டிக்கா பாட்டியா போட்டியின் மீது முழு கவனத்தை வைத்திருந்ததால் இடையே இருந்த தடுப்பு சுவரை கவனிக்காமல் தாண்டும் போது கால் தடுக்கி இப்போட்டியில் இந்தியா சறுக்கியதை போலவே கீழே விழுந்தார்.

அதை பார்க்க ஹர்மன்பிரீட் கௌர், ஸ்மிருதி மந்தனா உட்பட இந்திய வீராங்கனைகளும் வர்ணனையாளர்களும் பரபரப்புக்கு மத்தியில் சிரித்து மகிழ்ந்தனர்.

Advertisement