வீடியோ : மார்க் வாக் சாதனையை தகர்த்த டேவிட் வார்னர் – போறப்போக்கில் குட்டி ரசிகருக்கு கொடுத்த சூப்பர் பரிசு

David Warner Fans
Advertisement

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தொடர்ந்து அங்கேயே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அதில் முதலிரண்டு போட்டிகளில் ஏற்கனவே வென்ற ஆஸ்திரேலியா முன்கூட்டியே கோப்பையை கைப்பற்றிய நிலையில் நவம்பர் 22ஆம் தேதியன்று சம்பிரதாய 3வது போட்டி நடைபெற்றது. புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 48 ஓவர்களில் 355/5 ரன்களை குவித்து அசத்தியது.

ஒரு கட்டத்தில் மழை வந்ததால் 48 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதல் ஓவரிலிருந்தே இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் ஓப்பனிங் ஜோடி 38.1 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக நின்று 269 ரன்கள் குவித்து மிரட்டியது. அதில் அதிரடியாக செயல்பட்ட டிராவிஸ் ஹெட் 16 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 152 (130) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 106 (102) ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின் ஸ்டீவ் ஸ்மித் 21, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 12, மிட்சேல் மார்ஷ் 20, அலெக்ஸ் கேரி 12* என அடுத்து வந்த வீரர்கள் கணிசமான ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

வார்னரின் சாதனை பரிசு:

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஓலி ஸ்டோன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 356 ரன்களை துரத்திய இங்கிலாந்தின் ஜேசன் ராய் 33, டேவிட் மாலன் 2, ஜேம்ஸ் வின்ஸ் 7, சாம் பில்லிங்ஸ் 7, மொய்ன் அலி 18, கேப்டன் பட்லர் 1 என முக்கிய வீரர்கள் ஆரம்ப முதலே அனலாக பந்து வீசிய ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 31.4 ஓவரிலேயே இங்கிலாந்தை 142 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 221 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை ஒயிட்வாஷ் வெற்றியுடன் முத்தமிட்டது.

அத்துடன் டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற டி20 தொடரில் சொந்த மண்ணில் இங்கிலாந்து பரிசளித்த தோல்விக்கான பதிலடியையும் ஆஸ்திரேலியா கொடுத்தது. இருப்பினும் உலகக் கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் இங்கிலாந்து தாயகம் திரும்பிய நிலையில் இப்போட்டியில் சதமடித்த டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரிக்கி பாண்டிங் : 29
2. டேவிட் வார்னர் : 19*
3. மார்க் வாக் : 18
4. ஆரோன் பின்ச் : 16

- Advertisement -

அந்த மகிழ்ச்சியில் அவுட்டாகி சென்று கொண்டிருந்த அவரிடம் பெவிலியன் நுழைவு வாயிலின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் உங்களுடைய கிளவுஸை பரிசாக கொடுக்க முடியுமா என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஒரு நொடி கூட யோசிக்காத டேவிட் வார்னர் போற போக்கில் ஒன்றுக்கு 2 கையுறைகளையும் அந்த ரசிகரிடம் தூக்கி போட்டு விட்டு சென்றார். அதை தவறவிடாமல் பிடித்த அந்த குட்டி ரசிகர் நேராக தன்னுடைய உறவினர்கள் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்தார்.

அதில் ஒன்றை வாங்கிய மற்றொரு குட்டி ரசிகர் அந்த கையுறையின் அளவை தொட்டுப் பார்த்து அப்படியே வாயைப் பிளந்து ஒரு சில நொடிகள் நின்றதை கேமரா மேன் கச்சிதமாக படம் எடுத்தார். இதை இந்த குழந்தைகள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்த வர்ணனையாளர்கள் வருங்காலங்களில் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கூட விளையாடலாம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

முன்னதாக இதே தொடரில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் ஒரு ரசிகர் பேப்பர் வாயிலாக உங்களுடைய ஜெர்சியை கொடுக்குமாறு கேட்டார். அப்போது கொடுக்க முடியாத வார்னர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியின் போது கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அந்த நிலையில் இம்முறை நேரடியாக ஒரு குட்டி ரசிகர் பரிசு கேட்டதால் இவருக்காவது தாமதம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று உடனடியாக வார்னர் பரிசளித்திருப்பார் என்றே சொல்லலாம்.

Advertisement