எளிதான ஸ்டம்பிங்கை விட்ட டிகே, தோனி – தோனி என கூச்சலிட்ட ரசிகர்கள், பண்ட்க்கு வாய்ப்பளிக்க கோரிக்கை

DInesh Karthik
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை அசாத்தியமான வெற்றியுடன் தோற்கடித்து 2வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வீழ்த்தியுள்ளது. இதனால் சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவின் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா முதலிடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. உலக கோப்பையை வெல்லும் இந்த லட்சிய பயணத்தில் அக்டோபர் 27ஆம் தேதியன்று நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 179/2 ரன்கள் சேர்த்தது.

இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 9 ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ரோகித் சர்மா 53 (39) ரன்களும் விராட் கோலி 62* (44) ரன்களும் சூரியகுமார் 51* (25) ரன்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே சொற்ப ரன்களில் அவுட்டாகி 20 ஓவரில் 123/9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்தியாவின் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், அக்சர் படேல் மற்றும் அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

- Advertisement -

தோனி தோனி:
முன்னதாக இப்போட்டியில் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெதர்லாந்து அணியை காப்பாற்ற முயன்ற பஸ் டீ லீடி அக்சர் பட்டேல் வீசிய 8வது ஓவரின் 5வது பந்தில் இறங்கி வந்து சிக்ஸர் அடிக்க முயன்ற போதிலும் அற்புதமான சுழலில் தவறவிட்டார். ஆனால் அப்போது லேசாக சுழன்ற வாக்கில் வந்த பந்தை பிடிக்க தவறிய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மொத்தமாக தவற விட்டார். இறுதியில் அவரது கையில் பட்டு சென்ற பந்தை அர்ஷ்தீப் சிங் எடுத்துப் போட்டார்.

அப்படி எளிதாக வந்த அவுட் செய்யும் வாய்ப்பை அவர் நழுவ விட்டதால் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோபமடைந்து “தோனி தோனி” என்று இந்திய விக்கெட் கீப்பர்களின் நாயகனாக கருதப்படும் முன்னாள் வீரர் தோனியின் பெயரை கூச்சலிட்டார்கள். பொதுவாகவே அழுத்தமான நேரத்தில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக் அதன் காரணத்தாலேயே 2004இல் அறிமுகமானாலும் தோனியை மிஞ்ச முடியாமல் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற முடியாமல் தன்னுடைய கேரியரை தொலைத்தார்.

- Advertisement -

இருப்பினும் 37 வயதுக்குப்பின் போராடி பெற்றுள்ள இந்த வாய்ப்பில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி நேரத்தில் எளிதான ஒய்ட் வலையில் சிக்கி ஸ்டம்பிங் முறையில் அவுட்டான அவர் வெற்றியை தாரை வார்க்க தெரிந்தது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அந்த நிலையில் இப்போட்டியிலும் விக்கெட் கீப்பர்களின் முதன்மை வேலையாக கருதப்படும் ஸ்டம்ப்பிங் செய்வதில் அதே போல் சொதப்பினார். இதுவே இந்த போட்டி நெதர்லாந்துக்கு எதிராக இல்லாமல் பெரிய அணிக்கு எதிராக இருந்திருந்தால் நிச்சயம் அவருடைய சொதப்பல் தோல்வியை கொடுத்திருக்கலாம்.

மேலும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இது போன்ற சிறிய தருணங்களில் செய்யும் நுணுக்கமான வேலை கூட மிகப்பெரிய வெற்றியை பரிசளிக்கும். எடுத்துக்காட்டாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஷ்வின் 1 ரன் அடித்தாலும் 100 ரன்கள் குவித்ததற்கு நிகரான வேலையை வெளிப்படுத்தினார். அதனால் தினேஷ் கார்த்திக் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் அற்புதமாக செயல்படும் திறமையும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையையும் போக்குவதற்காக ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்குமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement