மீண்டெழுந்த இலங்கை, தமிழ்நாட்டில் பிறந்து டி20 உ.கோ’யில் ஹாட்ரிக் சாதனை படைத்த பவுலர் – வீடியோ உள்ளே

Sri Lanka Palaniyappan Meyyappan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் தற்போது முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றில் விளையாடப் போகும் கடைசி 4 அணிகளை தீர்மானிக்கும் முதல் சுற்று நடைபெற்று வருகிறது. அதில் முதல் நாளன்றே கத்துக்குட்டி நமீபியாவிடம் மண்ணைக் கவ்வி அவமானத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளான ஆசிய சாம்பியன் இலங்கை அக்டோபர் 18ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு கீலோங் நகரில் தன்னுடைய 2வது லீக் போட்டியில் ஐக்கிய அரபு நாடுகளை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கிய இலங்கைக்கு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 18 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அப்போது களமிறங்கி அதிரடி காட்ட முயன்ற டீ சில்வா 3 பவுண்டரி 1 சிக்சருடன் 33 (21) ரன்களில் ரன் அவுட்டான போதிலும் மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் நிஷாங்கா நங்கூரமாக நின்றதால் 14.3 ஓவரில் 117/2 என்ற நல்ல நிலைமையில் பெரிய ஸ்கோரை எட்டும் பயணத்தில் இலங்கை இருந்தது. அப்போது 15வது ஓவரை வீசிய இளம் சுழல் பந்து வீச்சாளர் பழனியப்பன் மெய்யப்பன் 4வது பந்தில் அதிரடி வீரர் பணுகா ராஜபக்சேவை 5 (8) ரன்களில் அவுட்டாக்கி அடுத்து களமிறங்கிய சரித் அஸலாங்காவை கோல்டன் டக் அவுட் செய்து மிரட்டினார்.

- Advertisement -

அபாரமான ஹாட்ரிக்:
அதனால் கடைசி பந்தில் ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பை பெற்ற அவரை இலங்கை கேப்டன் தசுன் சனாக்கா எளிதாக தடுத்து நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மற்ற 2 பந்துகளை விட அந்த பந்தில் மாயாஜாலத்தை காட்டிய மெய்யப்பன் சனாகாவின் தடுப்பையும் உடைத்து கிளீன் போல்ட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்களை சாய்த்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன் வாயிலாக உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் அமீரக வீரர் என்ற வரலாற்றைப் படைத்த அவர் ஒட்டுமொத்த டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த 5வது பவுலராகவும் சாதனை படைத்தார்.

அத்துடன் இவர் தமிழகத்தின் சென்னை நகரில் பிறந்து அந்நாட்டுக்காக விளையாடி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது தமிழக ரசிகர்களுக்கும் பெருமையாகும். முன்னதாக இவர் ஐபிஎல் தொடரில் 2020இல் பெங்களூரு அணிக்காகவும் 2021இல் சென்னை அணிக்காகவும் நெட் பந்து வீச்சாளராக செயல்பட்ட நிலையில் தற்போது அமீரக நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று இந்த வரலாற்றை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. பிரட் லீ (ஆஸ்திரேலியா) : வங்கதேசத்துக்கு எதிராக, கேப் டவுன், 2007
2. குட்டிஸ் கம்பர் (அயர்லாந்து) : நெதர்லாந்துக்கு எதிராக, அபுதாபி, 2021
3. வணிந்து ஹசரங்கா (இலங்கை) : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, ஷார்ஜா, 2021
4. ககிசோ ரபடா (தென் ஆப்பிரிக்கா) : இங்கிலாந்துக்கு எதிராக, ஷார்ஜா, 2021
5. கார்த்திக் மெய்யப்பன் (ஆமீரகம்) : இலங்கைக்கு எதிராக, கீலோங், 2022*

- Advertisement -

அவரது மாயா ஜாலத்தால் தொடக்க வீரர் நிஷாங்கா 6 பவுண்டரி 2 சிக்சருடன் 74 (60) ரன்கள் குவித்த போதிலும் இதர வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் 20 ஓவர்களில் இலங்கை 152/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமீரகம் சார்பில் அதிகபட்சமாக மெய்யப்பன் 3 விக்கெட்டுகளையும் சாஹூர் கான் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை தொடர்ந்து 153 ரன்களை துரத்திய அமீரக அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே நெருப்பாக பந்து வீசிய இலங்கை பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

மீண்டெழுந்த இலங்கை:
குறிப்பாக ஹஸரங்கா, சமீரா ஆகியோரது அற்புதமான பந்துகளுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி 17.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 73 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஆயாஸ் கான் 19 (18) ரன்களும் சித்திக் 18 (16) ரன்களும் எடுக்க இலங்கை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக துஷ்மந்தா சமீரா மற்றும் வணிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதனால் 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி இந்த வாழ்வா – சாவா போட்டியில் பெரிய வெற்றியை சுவைத்து முதல் வெற்றியை பதிவு செய்து சூப்பர் 12 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மறுபுறம் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்தது போல் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட அமீரகம் பேட்டிங்கில் மொத்தமாக சரிந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement