நான் என்ன கிழவனா ஆகிட்டேனா – செய்தியாளருக்கு பாபர் அசாம் கொடுத்த காரமான பதில், என்ன கேள்வி கேட்டார்னு பாருங்க

babar azam
- Advertisement -

நவீன கிரிக்கெட் டெஸ்ட், ஒருநாள் டி20 மற்றும் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் டி20 தொடரையும் சேர்த்து விளையாடுவதால் அதில் விளையாடும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஒரு கட்டத்தில் பணிச்சுமைக்கு உள்ளாகி சுமாராக செயல்படுகின்றனர். எடுத்துக்காட்டாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த பணிச்சுமையால் கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வருவதை கூறலாம். அதைத் தவிர்ப்பதற்காகவே சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் அவர் அடிக்கடி ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சில வீரர்கள் இளம் வயதிலேயே ஒரு வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விடுகிறார்கள்.

கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற நிலையில் கடந்த மாதம் சுமாரான பார்ம் மற்றும் காயம் காரணமாக 35 வயதிலேயே ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்தின் இயான் மோர்கன் ஓய்வு பெற்றார். அடுத்த வாரமே நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். அந்த வரிசையில் தற்போது நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து விலகி தாம் விரும்பும் போட்டிகளில் மட்டும் விளையாடும் முடிவை எடுத்துள்ளார்.

- Advertisement -

பாபரிடம் கேள்வி:
இதன் காரணமாக வரும் காலங்களில் இதேபோல் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் இளம் வயதாக இருந்தாலும் ஏதேனும் ஒருவகையான கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுவதை அதிகமாக பார்க்க முடியும் என்று பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்திருந்தார். அந்த நிலைமையில் நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 16 முதல் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்று விட்டு ஐக்கிய அரபு நாடுகளில் ஆகஸ்ட் 27 முதல் துவங்கும் ஆசிய கோப்பையில் அந்த அணி களமிறங்க உள்ளது.

இந்த பயணத்திற்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சமீபத்தில் இலங்கை டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் கையிலிருந்த வெற்றியை கோட்டை விடுவதற்கு இதுபோன்ற பணிச்சுமை தான் காரணமா என்ற கேள்வியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் ஒரு செய்தியாளர் கேட்டார். இது பற்றி அவர் எழுப்பிய கேள்வி பின்வருமாறு. “நீங்கள், ரிஸ்வான், ஷாஹீன் ஆகியோர் பாகிஸ்தானின் பெருமையாவீர்கள். இருப்பினும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தோற்றத்தை வைத்து பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் வீரர்களை பாதிப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? அதனால் நீங்கள் 2 வகையான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவது சரியான முடிவாக இருக்குமா?” என்று கேட்டார்.

- Advertisement -

அதற்கு நான் என்ன கிழவனாகி விட்டேனா என்ற வகையில் காரத்துடன் பதிலளித்த பாபர் அசாம் கூறியது பின்வருமாறு. “இது உங்களின் பிட்னெஸ் பொருத்தது. எனவே நாங்கள் இருக்கும் உடல் தகுதிக்கு ஏதேனும் ஒருவகையான கிரிக்கெட்டை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். மேலும் உங்களுக்கு நான் கிழவனாகி விட்டதாக தோன்றுகிறதா? அல்லது நான் கிழவனாகி விட்டேனா?” என்று பதிலளித்தார்.

அதற்கு பணிச்சுமை முன்பைவிட அதிகமாகிறது அல்லவா என்று அந்த செய்தியாளர் மீண்டும் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஒருவேளை பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்காக நாங்கள் எங்களுடைய உடல் தகுதியை மேலும் அதிகரித்து அதை ஈடு செய்வோம்” என்று கூறினார். மேலும் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதற்காக களமிறங்குவதில்லை என்று தெரிவித்த அவர் பாகிஸ்தானுக்காக போட்டியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதாக கூறினார்.

- Advertisement -

அவரின் இந்த நேரடியான அதேசமயம் சிரிப்பை ஏற்படுத்தும் பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல பார்மில் அபாரமாக பேட்டிங் செய்து வரும் இவர் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற நட்சத்திரங்களையும் முந்தி அதிக ரன்களை எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க : சீப் விளம்பரத்துக்காக என்னை இழுக்காதீங்க – பிரபல பாலிவுட் நடிகையை விளாசிய ரிஷப் பண்ட், என்ன நடந்தது?

குறிப்பாக இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ள இவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். மேலும் 3 வகையான ஐசிசி டாப்-10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement